×

பொதுமக்களின் கோரிக்கை ஏற்று அண்ணாசிலை பைபாஸ் பாலத்தின் கீழ் அரசு பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை

மானாமதுரை, ஆக.22: மானாமதுரை அண்ணாசிலை பைபாஸ் பாலத்தின் கீழ் மதுரை-ராமேஸ்வரம் மார்க்கமாக செல்லும் அரசு பஸ்கள் நின்று செல்ல போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளதற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மானாமதுரையில் 20 ஆண்டுகளுக்கு முன் பழைய பஸ் ஸ்டாண்டில் பஸ்களை நிறுத்த இடப்பற்றாக்குறை, நகருக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பால் பைபாஸ் சாலையில் புதுபஸ் ஸ்டாண்டு கட்டப்பட்டது. அப்போது மானாமதுரை நகர் ஆரம்பிக்கும் அண்ணாசிலை பைபாஸ் ரோட்டில் பஸ் ஸ்டாப் ஏற்படுத்தப்பட்டு பஸ்கள் நின்று சென்றன.

இந்நிலையில் நான்கு வழிச்சாலைக்காக அண்ணாசிலை பைபாஸ் பகுதியில் பாலம் அமைக்கப்பட்டதால் புதுபஸ் ஸ்டாண்டில் மட்டும் பஸ்கள் நின்று சென்றன. இதனால் மானாமதுரையில் கிழக்கு பகுதியான சிப்காட், பட்டத்தரசி, மாங்குளம், கன்னார்தெரு, மூங்கில் ஊரணி பகுதிகளை சேர்ந்தவர்கள் 3 கிலாமீட்டர் தூரம் பஸ் ஸ்டாண்டு சென்று பஸ் ஏறவேண்டி இருந்தது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.

இதுகுறித்து சே.சிதம்பரம் என்பவர் அளித்த கோரிக்கை மனுவின் மீது போக்குவரத்து கழக பொதுமேலாளர் ராமநாதபுரம் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள அரசு போக்குவரத்து கழக கிளைகளில் உள்ள ஓட்டுநர், நடத்துநர்களுக்கு பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி மானாமதுரை அண்ணாசிலை பைபாஸ் ரோட்டில் பாலத்தின் கீழ் அரசு பஸ்கள் நின்று செல்லவேண்டும்.

இதற்கான அறிவிப்பை கிளை டெப்போக்களில் அறிவிப்பு பலகைகளில் ஒட்டுவதுடன் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் இந்த நிறுத்தங்களில் பஸ்களை நிறுத்தி செல்வதை கண்காணிக்கவேண்டும் என்று கிளை மேலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து மானாமதுரையை சேர்ந்த சிதம்பரம் கூறுகையில், இரவு நேரங்களில் தல்லாகுளம் பகுதியில் இறங்கி நடந்து செல்ல முடியாத நிலை இருந்தது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் சிரமப்பட்டனர். மானாமதுரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது. நடவடிக்கை எடுத்த பொது மேலாளருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

The post பொதுமக்களின் கோரிக்கை ஏற்று அண்ணாசிலை பைபாஸ் பாலத்தின் கீழ் அரசு பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Annasilai Bypass Bridge ,Manamadurai ,Madurai-Rameswaram ,Manamadurai Annachilai Bypass Bridge ,Annachilai Bypass Bridge ,Dinakaran ,
× RELATED பஸ் விபத்தில் 9 பேர் காயம்