×

கீழ்கட்டளை ஏரியில் நீர் திருட்டு விவகாரம்; 34 மின் இணைப்புகள் துண்டிப்பு: மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை

தாம்பரம்: கீழ்கட்டளை ஏரியையொட்டி லாரிகள் மூலம் தண்ணீர் உறிஞ்சுவதை தடுக்கும் வகையில், முறைகேடான 16 போர்வெல் மற்றும் 34 மின் இணைப்புகளை துண்டித்து மாநகராட்சி ஆணையர் அழகுமீனா நடவடிக்கை மேற்கொண்டார். பல்லாவரம் – துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் பல்லாவரம் பெரிய ஏரி, கீழ்கட்டளை ஏரி, பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி உள்ளிட்டவை அமைந்துள்ளன. மழைக்காலங்களில் இந்த ஏரிகளில் சேமிக்கப்படும் நீர், சுற்றுப் பகுதி மக்களின் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளன. சமீபத்தில் பெய்த கன மழையால், மேற்கண்ட ஏரிகளில் நீர் நிரம்பி காணப்படுகின்றன.

இந்நிலையில், கீழ்கட்டளை ஏரியில் இருந்து ஏராளமான தனியார் டேங்கர் லாரிகள் மூலம் தொடர்ந்து தண்ணீர் திருட்டு வெளிப்படையாக நடைபெற்று வருகிறது. இதனால் கீழ்கட்டளை ஏரியில் நீர் மட்டம் குறைந்து வருகிறது. இந்த ஏரியில் இருந்து உறிஞ்சப்படும் நீர், பல்வேறு ஐடி நிறுவனங்கள், நட்சத்திர விடுதிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் அதிக லாபத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே, ஏரியில் இருந்து சட்ட விரோதமாக தண்ணீரை திருடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல், ஏரி அருகே உள்ள தனியார் நிலங்களில் அனுமதியின்றி போர்வெல் அமைத்து, தண்ணீர் உறிஞ்சி விற்பனை செய்யப்பட்டு வந்தது.  மேலும், இந்த தனியார் டேங்கர் லாரிகள் அதிவேகத்தில் இயக்கப்படுவதால், விபத்துகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், தண்ணீர் லாரி மோதி பள்ளி மாணவி லியோரா உயிரிழந்த நிலையில், கீழ்க்கட்டளை ஏரியையொட்டி தண்ணீர் எடுத்து செல்லும் வாகனங்கள் நிற்கும் இடத்தை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கீழ்கட்டளை ஏரியையொட்டி, நன்மங்கலம் ஏரி கிணறுகளில் முறைகேடாக தண்ணீர் எடுக்கப்பட்டு சுற்றுப்புறங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதை தடுக்க, முறையற்ற போர்வெல் தொடர்புகள் மற்றும் மின் இணைப்புகளை துண்டிக்குமாறு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள முறையற்ற 16 போர்வெல் மற்றும் 34 மின் இணைப்புகள் என அனைத்தும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா மேற்பார்வையில் துண்டிக்கப்பட்டது. மேலும் தண்ணீர் லாரி மற்றும் இதர லாரிகள் செல்வதற்கான நேரம் முறைபடுத்தப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

The post கீழ்கட்டளை ஏரியில் நீர் திருட்டு விவகாரம்; 34 மின் இணைப்புகள் துண்டிப்பு: மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Kylakatale Lake ,Tambaram ,Kilikatalla lake ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...