×

பல்லாவரத்தில் அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு நோட்டீஸ்: அதிகாரிகள் நடவடிக்கை

பல்லாவரம்: பல்லாவரத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர். பல்லாவரம் பாரதி நகர், பச்சைமலை பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான மலை புறம்போக்கு நிலத்தினை சிலர், ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் கடைகள் கட்டியுள்ளனர். இதை அகற்ற கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பேரில், மேற்கண்ட பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் இருக்கும் 199 குடியிருப்புகளை உடனடியாக அகற்றி, நிலத்தினை மீட்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அதன் அடிப்படையில் வருவாய்த்துறை அதிகாரிகள், நேற்று காலை அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்ய வலியுறுத்தி, நோட்டீஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, சுமார் 5 வீடுகளின் சுற்றுச்சுவர்கள் இடிக்கப்பட்டது.
தகவலறிந்து திரண்ட அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள், போதிய கால அவகாசம் கொடுக்காமல் எப்படி குடியிருப்புகளை அகற்ற வரலாம் என்று கூறி வருவாய்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வீடுகளை காலி செய்வது குறித்த எச்சரிக்கை நோட்டீஸை மட்டும் கொடுத்து விட்டு, அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில், 100க்கும் மேற்பட்ட பல்லாவரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.  கடந்த வாரம் இதே பகுதியில் நித்தியானந்தா சீடர்கள் வசம் இருந்த சுமார் ரூ30 கோடி மதிப்பிலான ஒரு ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டது. மீண்டும் அதுபோன்று அரசு நிலத்தை மீட்க வருவாய் துறையினர் அதிரடி காட்டி வரும் நடவடிக்கை சமூக ஆர்வலர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

The post பல்லாவரத்தில் அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு நோட்டீஸ்: அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,Pallavaram Bharti Nagar ,Pacchimalai ,Dinakaran ,
× RELATED சலுகை விலை அறிவிப்பால் துணிக்கடையில்...