×

எனக்கு கல்யாணம் பிடிக்கல… தாலிய உண்டியல்ல போடுங்க… மணமகள் அட்ராசிட்டியால் கடைசி நேரத்தில் நின்ற டும்…டும்…டும்…

திருவாடானை: திருமணம் பிடிக்காததால் மணமகனிடமிருந்து தாலியை பிடுங்கி உண்டியலில் போட மணமகள் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஆதியாகுடியை சேர்ந்தவர் சரவணன் (29). வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவருக்கும், இதே பகுதியைச் சேர்ந்த சின்னகீரமங்கலம் வத்தாப்பட்டி பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடக்க இருந்தது. அதற்காக இரு வீட்டார் தரப்பிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு மணப்பெண்ணும், மாப்பிள்ளையும் திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலுக்கு நேற்று காலை அழைத்து வரப்பட்டனர். அங்கு திருமணம் செய்ய கோயில் நிர்வாகத்தில் உள்ள திருமண பதிவேட்டில் இருவரும் கையெழுத்து போட்டு விட்டு தயாரானார்கள்.

சடங்குகள் முடித்து தாலியை மணமகன் கட்ட முயன்றபோது, மணப்பெண் திடீரென தாலியை பிடுங்கி, ‘‘எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. பெற்றோர் வற்புறுத்தியதால் ஒத்துக் கொண்டேன். எனக்கு திருமணமே வேண்டாம்’’ என்று கூறி தாலியை கோயில் உண்டியலில் போட முயன்றுள்ளார். அதிர்ச்சி அடைந்த இருவீட்டாரும், மணப்பெண்ணை பிடித்து தாலியை வாங்கி கொண்டனர். அதனை தொடர்ந்து திருமணத்திற்கு மணப்பெண் மறுக்கவே அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மணமகன் குடும்பத்தினர் திருவாடானை போலீசில் நம்பிக்கை மோசம் செய்து விட்டதாக கூறி, மணமகள் குடும்பத்தார் மீது புகார் கொடுத்தனர். போலீசார் இரு வீட்டாரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தியும், மணப்பெண் ஒத்துக் கொள்ளாததால் திருமணம் நின்றது. மணமகள் மேஜர் என்பதால் அவர் விருப்பப்படியே பெற்றோரிடமோ அல்லது காப்பகத்திலோ ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

The post எனக்கு கல்யாணம் பிடிக்கல… தாலிய உண்டியல்ல போடுங்க… மணமகள் அட்ராசிட்டியால் கடைசி நேரத்தில் நின்ற டும்…டும்…டும்… appeared first on Dinakaran.

Tags : Thaliya ,Thiruvadan ,Thalia ,
× RELATED திருவாடானை திருவெற்றியூரில் சுறுசுறுப்பாக நடக்கும் சுகாதார நிலைய பணி