×

சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டம்

புதுடெல்லி: கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்து எழுத்துப்பூர்வ மனுவை தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும். அதேப்போன்று ஆலையின் உள்ளே இருக்கும் பராமரிப்பு பணியை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் முன்னதாக இந்த வழக்கு கடந்த மே.5ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழகத்தின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்பதாக தெரிவித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு, ஆலையை மூடியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தொடர்புடைய அரசாணைகள், ஆவணங்கள் மற்றும் குறுகிய எழுத்துப்பூர்வ வாதங்கள் அனைத்தையும் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் முந்தைய உத்தரவின் படி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரப்பில் வழக்கறிஞர் பூர்னிமா கிருஷ்ணமூர்த்தி உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அதில், “ஸ்டெர்லைட் ஆலை எந்த ஒரு அடிப்படை விதிமுறைகளையும் பின்பற்றவில்லை. கடந்த 22 வருடங்களாக ஆலை இருக்கும் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சிகப்பு எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு ஆலையின் நடவடிக்கை இருந்தது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த அனைத்து விவரங்களையும் சென்னை உயர்நீதிமன்றம் முழுமையாக ஏற்றுக்கொண்டது. அதனை கண்டிப்பாக நிராகரிக்க முடியாது.

அதேப்போன்று வழக்கு விசாரணைகளின் போதும் நீதிமன்றங்களில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் வேதாந்தா நிறுவனம் தவறான தகவல்களை கொடுத்துள்ளது. எனவே கடுமையான சுற்றுச்சூழலை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாட்டில் ஒருபோதும் இயங்க அனுமதிக்க முடியாது. அதனால் விசாரிக்க முகாந்திரம் இல்லாத வேதாந்தா நிறுவனத்தின் அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் அபராதத்துடன் தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.

The post சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Supreme Court ,New Delhi ,Dinakaran ,
× RELATED உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நகரம்,...