×

தொடர் முகூர்த்தம் காரணமாக ஜெட் வேகத்தில் வாழை இலை விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்புவனம்: தொடர் முகூர்த்தம் காரணமாக வாழை இலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், நெல்முடிகரை, புதூர், நைனார்பேட்டை, திருப்பாச்சேத்தி, கானூர், மாரநாடு, மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. நாட்டு வாழை, ஒட்டு வாழை, பச்சை, ரஸ்தாளி, பூவன் என பல்வேறு ரகங்கள் இருந்தாலும் இப்பகுதியில் ஒட்டு வாழையே அதிகளவு பயிரிடப்படுகிறது. பெரும்பாலும் முகூர்த்த நாட்களை கணக்கிட்டே விவசாயிகள் வாழை சாகுபடி செய்கின்றனர். கடந்தாண்டு ஆகஸ்ட், செப்டம்பரில் வாழை நடவு செய்துள்ள விவசாயிகளுக்கு தற்போது அறுவடை காலமாகும். ஆவணியில் முகூர்த்த நாட்கள் என்பதால் வாழை இலை, வாழை குலை, வாழை மரம் உள்ளிட்டவைகள் நல்ல விலை போகும். எனவே விவசாயிகள் அதனை எதிர்பார்த்து காத்திருந்தனர். அறுவடைக்கு முன், பக்க கன்றுகள் மூலம் வாழை இலைகளை அறுவடை செய்வர். ஒரு ஏக்கரில் சுழற்சி முறையில் ஆயிரம் இலைகள் வரை அறுவடை செய்யப்படும்.

திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதி வாழை இலைகள் பத்து நாட்கள் ஆனாலும் வாடாது, பச்சை நிறமும் மாறாது என்பதால் வியாபாரிகள் விரும்பி வாங்கி செல்வர். தற்போது அறுவடை பணி மும்முரமாக நடந்து வருகிறது. கடந்த மாதம் 200 இலைகள் கொண்ட ஒரு கட்டு இலை ரூ.300 வரை விற்பனை செய்த நிலையில் தற்போது ரூ.1400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தொடர்ந்து மூகூர்த்த நாட்கள் இருப்பதால் வாழை இலை விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது. இதுகுறித்து விவசாயி கண்ணன் கூறுகையில், ‘வாழை இலைக்கு நிரந்தர விலை கிடையாது. மூகூர்த்தம் மற்றும் பண்டிகை போன்ற விஷேச காலங்களில் வாழை இலை கட்டு ரூ.1000 வரை விறபனையாகும். மற்ற நாட்களில் கட்டு ரூ.200 முதல் ரூ.300 வரை விலை போகும். அறுவடை கூலி கூட கொடுக்க முடியாது. மொத்த வியாபாரிகளும் இப்போது விலை இல்லை. இலை அறுவடை செய்ய வேண்டாம் என்பார்கள். விளைபொருட்களுக்கு நிரந்தர விலை நிர்ணயமே கிடையாது. ஹோட்டல்கள், டீ கடைகளில் பிளாஸ்டிக் பேப்பர் பயன்பாடுகளை முற்றிலும் ஒழிக்கவும், வாழை இலைகளை பயன்படுத்தவும் அரசு நடவடிக்கை வேண்டும்’ என்றார்.

The post தொடர் முகூர்த்தம் காரணமாக ஜெட் வேகத்தில் வாழை இலை விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Thirupuvanam ,Tiruppuvanam ,Sivagangai district ,Dinakaran ,
× RELATED கோடைகால பயிற்சி முகாம் இன்று துவக்கம்