×

Food spot

தம் கா ரொட் அல்வா

பெயரிலே அல்வா இருக்கிறது, ஆனால் இது மற்ற அல்வாவைப் போலில்லாமல் சுவையிலும் செய்முறையிலும் தனித்தன்மை மிகுந்திருக்கிறது. பால், ரவை, சீனி, முட்டையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுவதால் சாப்பிடும்போது புதுவிதமாக இருக்கும். இதன் செய்முறையில் சிறிதளவு மாற்றம் வந்தாலும் அசல் சுவையும், நிறமும் வராது. தமிழகத்தில் நாகூர், காரைக்காலில் அதிகம் கிடைக்கும் இந்த அல்வாவை சென்னையில் சாப்பிட நினைத்தால் ராயப்பேட்டையில் உள்ள பாஷா அல்வா வாலா என்கிற இனிப்பகம் நல்ல சாய்ஸ். மூன்று தலைமுறைகளாக இந்த அல்வாவை அவர்கள் செய்து வருவதால் அதன் சுவையிலும், தரத்திலும் சிறிதளவு மாற்றம் கூட இருக்காது.

பானிபூரி

பானிபூரியின் பூர்வீகம் வட இந்தியா. சரியாக சொல்ல வேண்டும் என்றால் தெற்கு பீஹாரில்தான் பானிபூரி முதன்முதலாக தோன்றியது என்கிறார்கள். அங்கு தொடங்கிய பானிபூரியின் வரலாறு இப்போது உலகம் முழுக்கவே எல்லா தெருக்களிலும் இருக்கிறது. சென்னையிலும் கூட தெருவுக்குத் தெரு வண்டிக்கடைகளில் பானிபூரி கிடைக்கிறது. ஆனால், பானிபூரியை அதன் சொந்த ஊருக்கே சென்று சாப்பிட வேண்டும் என நினைத்தால் பீஹார் எல்லாம் போகத் தேவையில்லை. சென்னையில் வி.ஆர் மாலில் இருக்கிற கைலாஷ் பர்பத் என்கிற வட இந்திய கஃபேக்கு சென்றாலே போதுமானது. அங்கு கிடைக்கிற தரமான மசாலாவும், ரசமும், பூரியும் அதன் பூர்வீகத்திற்கே நம்மை கூட்டிச் செல்லும்.

உப்பு உருண்டை

அரிசி மாவை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிற ஒருவகை உருண்டைதான் இந்த உப்பு உருண்டை. இன்னும் கூட வீடுகளில் அடிக்கடி செய்யக்கூடிய பண்டமாக இருக்கிறது. அரிசிமாவில் கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, சீரகம், வரமிளகாய், கடுகு ஆகியவற்றைச் சேர்த்து, அதில் உப்புத் தண்ணீரைத் தெளித்து இந்த உருண்டையை வேக வைத்து எடுப்பார்கள். இந்த சுவையான உப்பு உருண்டையை சென்னையில் சாப்பிட வேண்டும் என நினைத்தால் மயிலாப்பூருக்குத்தான் செல்ல வேண்டும். ஆம், மயிலை கபாலீஸ்வரர் கோயில் சந்தில் மாலை 6 மணிக்கு இருசக்கர வாகனத்தில் வைத்து நவதானியங்களோடு சேர்த்து இந்த உப்பு உருண்டையை விற்பார்கள். 10 ரூபாய்க்கு கிடைக்கிற இந்த உருண்டை சாப்பிடுவதற்கு அவ்வளவு சுவையாக இருக்கும்.

The post Food spot appeared first on Dinakaran.

Tags : Tam Ka Rot ,Alva ,Dinakaran ,
× RELATED வல்லவன் வகுத்ததடா விமர்சனம்