×

அயர்லாந்துடன் 2வது டி20 போட்டியில் வென்று இந்தியா தொடரை கைப்பற்றியது ஆடும் லெவனை தேர்வு செய்வது கடினமாக உள்ளது: கேப்டன் பும்ரா பேட்டி

டப்ளின்: இந்தியா-அயர்லாந்து அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் 2வது போட்டி நேற்றிரவு நடந்தது. டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 58 (43 பந்து), சஞ்சு சாம்சன் 40 (26பந்து), ரிங்குசிங் 38 (21பந்து), ஷிவம் துபே நாட் அவுட்டாக 22 ரன் எடுத்தனர். , பின்னர் களம் இறங்கிய அயர்லாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களே எடுத்தது. இதனால் 33 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அயர்லாந்து அணியில் ஆண்டி பால்பிர்னி அதிகபட்சமாக 72 ரன் (51பந்து) எடுத்தார். இந்திய பவுலிங்கில் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட் எடுத்தனர். ரிங்குசிங் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் பும்ரா அளித்த பேட்டி: “வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது மகிழ்ச்சியாக உள்ளது. நான் கொஞ்சம் வேகமாக ஓடிவந்து பந்து வீசினேன். நாங்கள் இன்று நல்ல ஸ்கோர் கொண்டு வர விரும்பினோம். ஆடுகளம் மெதுவாக இருக்கும் என்று நினைத்தோம். அதேபோல் இருந்தது. விளையாடும் அணியை தேர்ந்தெடுப்பது சில நேரங்களில் கடினமாக இருக்கும். ஏனென்றால் அனைத்து வீரர்களும் நம்பிக்கையுடன் இருப்பார்கள். அவர்கள் வலை பயிற்சியில் மிகச் சிறப்பாக விளையாடுகின்றனர். ஒரு கேப்டனாக என்னால் எதுவும் கேட்க முடியாது. எங்கள் அனைவருக்கும் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவு இருந்தது.

எதிர்பார்ப்புகளைப் பற்றி நான் அதிகம் யோசிப்பதில்லை. நீங்கள் அந்த சுமையோடு விளையாடினால் நீங்கள் அழுத்தத்திற்கு உள்ளாவீர்கள். எதிர்பார்ப்புகளை நிர்வகிப்பதற்கு, அதை சாதாரணமாக வைத்திருப்பதற்கு நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். திரும்பி வந்ததில் மகிழ்ச்சி” என்றார். இந்த வெற்றி மூலம் 2-0 என இந்தியா தொடரை கைப்பற்றிய நிலையில் கடைசி போட்டி நாளை மறுநாள் நடக்கிறது.

* ஆட்டநாயகன் ரிங்குசிங் ஹேப்பி…

ஆட்ட நாயகன் விருது பெற்ற ரிங்குசிங் அளித்த பேட்டி: ஐபிஎல்லில் நான் செய்ததைச் செய்ய முயற்சித்தேன். மிகவும் நம்பிக்கையுடன் அமைதியாக இருக்க முயற்சித்தேன்.கேப்டனின் பேச்சைக் கேட்கிறேன். மிகவும் நன்றாக உணர்கிறேன். பத்து வருடங்களாக கிரிக்கெட் விளையாடிவருகிறேன், கடின உழைப்புக்குப் பலன் கிடைத்தது. சர்வதேச கிரிக்கெட்டில் நான் பேட் செய்த முதல் ஆட்டத்திலேயே ஆட்ட நாயகன் விருதை பெற்றதில் மகிழ்ச்சி, என்றார்.

பிட்ஸ்… பிட்ஸ்…

* சர்வதேச டி.20 போட்டியில் வேகமாக 50 விக்கெட் (33 போட்டி) வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்தார். பும்ரா 41, புவனேஷ்வர்குமார் 50 போட்டியில் 50 விக்கெட் எடுத்துள்ளனர். சர்வதேச அளவில் லுங்கி நிகிடி 32 போட்டியில் 50 விக்கெட் எடுத்து டாப்பில் உள்ளார்.

* டி.20 கிரிக்கெட்டில் பும்ரா நேற்று 10வது முறையாக மெய்டன் ஓவர் வீசினார். புவனேஷ்வர்குமார் 10, ஹர்பஜன்சிங் 5 மெய்டன் ஓவர் விசி உள்ளனர்.

* அயர்லாந்துக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியாக 7வது டி.20 போட்டியில் வென்றுள்ளது. அதிகபட்சமாக வங்கதேசத்திற்கு எதிராக 8 போட்டியில் தொடர் வெற்றி கண்டுள்ளது.

 

 

The post அயர்லாந்துடன் 2வது டி20 போட்டியில் வென்று இந்தியா தொடரை கைப்பற்றியது ஆடும் லெவனை தேர்வு செய்வது கடினமாக உள்ளது: கேப்டன் பும்ரா பேட்டி appeared first on Dinakaran.

Tags : India ,2nd ,Ireland ,Captain Bumrah ,Dublin ,T20I ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் நேற்று பதிவான அதிகபட்ச வெப்பநிலையில் சேலம் 3ம் இடம்!!