×

பனப்பாக்கம் கிராமத்தில் சமூகவிரோத மையமாக மாறிய நூலக கட்டிடம்: மாணவர்கள் அவதி

ஊத்துக்கோட்டை: பனப்பாக்கம் கிராமத்தில் நூலகர் பணியில் ஆட்கள் நியமிக்கப்படாததால், ஒரு நூலக கட்டிடம் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக பூட்டியே கிடக்கிறது. இக்கட்டிடத்தில் எந்நேரமும் மது அருந்துதல் உள்பட பல்வேறு சமூகவிரோத செயல்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் அப்பகுதி மாணவர்கள் பொது அறிவு திறன் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பனப்பாக்கம் கிராமத்தில் படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், முதியவர்கள், விவசாயிகள் உள்பட சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் பொது அறிவு திறனை வளர்க்கும் வகையில், கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் ஒரு நூலகக் கட்டிடம் கட்டப்பட்டது. இந்த நூலகத்தை பலர் பயன்படுத்தி பயனடைந்து வந்துள்ளனர். இதில் ஒரு நூலகரும் வேலைபார்த்து வந்துள்ளார். எனினும், குறைந்த சம்பளம் காரணமாக அந்த நூலகரும் வேலையிலிருந்து நின்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த நூலக கட்டிடத்தில் வேறொரு நூலகர் இதுவரை பணியில் நியமிக்கப்படவில்லை. இதனால் அந்த நூலகக் கட்டிடம் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக பூட்டியே கிடக்கிறது. இதையடுத்து இந்த நூலகக் கட்டிடத்தில் எந்நேரமும் மது அருந்துதல் உள்பட பல்வேறு சமூகவிரோத குற்றச் செயல்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் நூலக கட்டிடத்தின் ஜன்னல்கள், கதவுகள் உள்பட பல்வேறு கட்டிட பொருட்கள் உடைந்து சேதமாகியுள்ளன. அங்கு நூலகம் பூட்டியே கிடப்பதால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பொது அறிவு திறனை வளர்க்க வழியின்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, பனப்பாக்கம் கிராமத்தில் பூட்டியே கிடக்கும் நூலகக் கட்டிடத்தை முறையாக சீரமைத்து, அங்கு நடைபெறும் சமூகவிரோத செயல்களை முற்றிலும் அகற்றி, ஒரு நூலகரை பணியில் நியமித்து மீண்டும் மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post பனப்பாக்கம் கிராமத்தில் சமூகவிரோத மையமாக மாறிய நூலக கட்டிடம்: மாணவர்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Banapakkam ,Uthukkottai ,Panapakkam ,Panapakkam village ,
× RELATED மின்விளக்குகள் எரியாத புதிய மேம்பாலம்: பெரியபாளையம் அருகே விபத்து அபாயம்