×

மறைமலை நகரில் இன்று முதல் தொழில் முதலீட்டு சிறப்பு கடனுதவி மேளா: கலெக்டர் கலைச்செல்வி மோகன் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோரின் வசதிக்காக, இன்று முதல் மறைமலைநகரில் டிஐஐசியின் சிறப்பு கடனுதவி மேளா வரும் செப்டம்பர் 1ம் தேதிவரை நடைபெறுகிறது. இதில் புதிதாக தொழில் முனைவோர் பங்கேற்று பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் (டிஐஐசி), கடந்த 1949ம் ஆண்டு முதல் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதி கழகம் ஆகும். இதுவரை இந்நிறுவனம் எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி, தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.

இக்கழகம் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளின்கீழ் புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டு இருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதர்க்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டத்தின்கீழ் கடனுதவி வழங்கி வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், டிஐஐசியின் மறைமலை நகர் கிளை அலுவலகத்தில் (எச்ஐஜி 42&43, முதல் தளம், எம்ஜிஆர் சாலை, மறைமலை நகர்) இன்று முதல் வரும் செப்டம்பர் 1ம் தேதி சிறு,குறு மற்றும் நடுத்தர (எம்எஸ்எம்இ) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடனுதவி துவங்கப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு கடனுதவி மேளாவில் இச்சிறப்பு தொழில் கடன் மேளாவில் டிஐஐசியின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், ஒன்றிய-மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.

இதில் தகுதிபெறும் தொழில்களுக்கு, தமிழக அரசின் 25% முதலீட்டு மானியம் (₹150 லட்சம்) வரை வழங்கப்படும். இம்முகாமில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50% சலுகை அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பை புதிய தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் பயன்படுத்தி புதிய தொழில் திட்டங்களுடன் வந்து, தொழில் கடன் மற்றும் ஒன்றிய-மாநில அரசுகளின் மானிய சேவைகளைப் பயன்படுத்தி பயனடையலாம் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தகவல் தெரிவித்துள்ளார்.

The post மறைமலை நகரில் இன்று முதல் தொழில் முதலீட்டு சிறப்பு கடனுதவி மேளா: கலெக்டர் கலைச்செல்வி மோகன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Karamalai Nagar ,Collector ,Kalachelvi Mohan ,Kanchipuram ,Kanchipuram district ,TIIC ,Kiramalai Nagar ,Dinakaran ,
× RELATED கோடை வெயில் முடிந்து மழைக்காலம்...