×

பாரெங்கும் புகைமண்டலமாக காட்சி!: அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் பற்றி எரியும் காட்டுத்தீ..மக்கள் பாதிப்பு..!!

வாஷிங்டன்: அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் பற்றி எரியும் காட்டுதீயால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கனடா நாட்டில் பிரிட்டீஸ் கொலம்பியா பகுதியில் பரவும் காட்டுத் தீயால் கெலோவ்னா என்ற இடத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 17ம் தேதி பற்றிய தீயானது தொடர்ந்து எரிவதால் அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. 2,400 வீடுகளில் வசித்து வந்த மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

அல்பேனியா நாட்டில் உள்ள சுற்றுலா தலமான குய்ப்பரோ என்ற இடத்தில் பற்றியுள்ள காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களும், பொதுமக்களும் போராடி வருகின்றனர். அறுவடைக்கு பிறகு விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் தீ வைப்பதே காட்டுத் தீ பரவ காரணம் என தெரிவித்துள்ள போலீசார், கடந்த 24 மணி நேரத்தில் 4 பேரை கைது செய்துள்ளனர். தீ விரைவில் கட்டுக்குள் வரும் என்றும் புதிதாக வேறு எங்கும் தீ பற்றவில்லை என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்பெயின் நாட்டில் கனரி தீவுகளில் பற்றிய காட்டுத் தீயால் பொதுமக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

டெனரஸ் என்ற இடத்தில் தீ பற்றியுள்ள நிலையில், அருகில் உள்ள ரவெலோ என்ற பகுதியில் வசித்த மக்கள் முகாமுக்கு அழைத்து வரப்பட்டுள்ளன. அவர்களுக்கு தண்ணீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வாஷிங்டன் அருகே மெடிக்கல்லீப் பகுதியில் பற்றிய காட்டுத் தீயால் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை பற்ற தொடங்கிய காட்டுத்தீ சுமார் 19 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு பரவியுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், 190 கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

The post பாரெங்கும் புகைமண்டலமாக காட்சி!: அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் பற்றி எரியும் காட்டுத்தீ..மக்கள் பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : America, ,Canada ,Washington ,United States ,British Columbia ,
× RELATED இந்தியாவில் முதலீடு: வாரன் பஃபெட் விருப்பம்