×

சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசு மீது கடும் விமர்சனம்; ‘இந்தியா’ கூட்டணியில் ஆம்ஆத்மி தொடருமா? இலவச திட்டங்களை அறிவித்து கெஜ்ரிவால் பேச்சு

ராய்பூர்: சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசு மீது அரவிந்த் கெஜ்ரிவால் கடும் விமர்சனம் வைத்துள்ளதால் அவரது ஆம்ஆத்மி கட்சி ‘இந்தியா’ கூட்டணியில் தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேற்று ராய்பூர் சென்றிருந்த டெல்லி முதல்வரும், ஆம்ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், ‘சட்டீஸ்கர் மாநில அரசுப் பள்ளிகளின் தரம் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது.

பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆசிரியர்களுக்கு முறையாக சம்பளம் கூட வழங்கப்படவில்லை. ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளின் தரத்தை பாருங்கள். நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், டெல்லி அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. சட்டீஸ்கரில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால், வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்து பேசினார்.

அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய ‘இந்தியா’ கூட்டணியில் ஆம்ஆத்மி அங்கம் வகிக்கிறது. இந்த கூட்டணியை காங்கிரஸ் ஒருங்கிணைத்து வருகிறது. இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால், சட்டீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் அரசை குறைகூறி கடுமையாக விமர்சனம் செய்தது புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கூறுகையில், ‘சட்டீஸ்கரை டெல்லியுடன் ஒப்பிடக்கூடாது.

ஆனால் முந்தைய அரசை தற்போதைய அரசுடன் ஒப்பிட வேண்டும். சட்டீஸ்கர் மாநிலத்தின் எந்த துறையாக இருந்தாலும், டெல்லி அரசின் செயல்பாட்டுடன் ஒப்பிட்டு விவாதம் நடத்த தயாராக உள்ளோம்’ என்றார். ‘இந்தியா’ கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைபெறவுள்ள நிலையில், ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸுக்கு இடையே சமீப நாட்களாக மோதல் வலுத்து வருகிறது. வரும் லோக்சபா தேர்தலின் போது தலைநகர் டெல்லியின் 7 ெதாகுதிகளிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடப் போவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் அல்கா லம்பா கூறினார்.

இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் கூறுகையில், ‘எங்களுடன் கூட்டணி அமைக்க வேண்டாம் என்று காங்கிரஸ் ஏற்கனவே முடிவு செய்திருந்தால், அடுத்த ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்தில் கலந்து கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. எங்கள் தலைமை அடுத்த கூட்டத்தில் கலந்து கொள்வோமா இல்லையா என்பதை முடிவு செய்யவேண்டிய காலகட்டத்தில் உள்ளோம்’ என்றார். ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருக்கும் டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் மாநில தலைமையும், ‘இந்தியா’ கூட்டணியில் ஆம்ஆத்மி இருப்பதை விரும்பவில்லை. இருப்பினும் காங்கிரஸ் தலைமை, ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து செயல்படுவதாக கூறுகிறது.

The post சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசு மீது கடும் விமர்சனம்; ‘இந்தியா’ கூட்டணியில் ஆம்ஆத்மி தொடருமா? இலவச திட்டங்களை அறிவித்து கெஜ்ரிவால் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Suttisgarh State Congress ,Govt ,AAatmy ,India ,Kejriwal ,Raipur ,Arvind Kejriwal ,Suttisgarh State Congress Govt ,Aamadmi Party ,Government ,Chatttisgarh State Congress ,Dinakaran ,
× RELATED ஓட்டுநர் உரிமம் பெற மருத்துவச்...