×

₹52 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட திருவொற்றியூர் கால்வாய் மேம்பால பணி நிறைவு: அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்

திருவொற்றியூர், ஆக.20: ₹52 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட திருவொற்றியூர் கால்வாய் மேம்பாலப் பணி 95 சதவீதம் நிறைவடைந்ததையடுத்து அடுத்த மாதம் மேம்பாலம் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருவொற்றியூரில் இருந்து மணலி செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க எம்.ஜி.ஆர்.நகர் பக்கிங்காம் கால்வாய் குறுக்கே ₹52 கோடி செலவில் மேம்பாலம் கட்டுவதற்கு நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டு, கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதற்கான பணி தொடங்கப்பட்டது.

சுமார் 530 மீட்டர் நீளம் கொண்ட இந்த மேம்பாலப் பணி 2018ம் ஆண்டு இறுதிக்குள் முடிந்திருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த பணி முடிவடையாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் திருவொற்றியூரில் இருந்து மணலி, மாதவரம் போன்ற பகுதிகளுக்கு மாநகரப் பேருந்து, கார் மற்றும் பைக்கில் செல்பவர்கள் கார்கில் நகர் அருகே பக்கிங்காம் கால்வாயோரம் உள்ள ஆபத்தான சாலை வழியாக சுமார் 8 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் நேரம் வீணாவதோடு, அலைச்சல் அதிகமாகி வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

குறிப்பாக அவசரத்துக்குச் செல்லும் ஆம்புலன்ஸ், ஆட்டோ, குடிநீர் லாரி போன்ற வாகனம் கூட சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் 2021ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் கலாநிதி வீராசாமி எம்பி, கே.பி.சங்கர் எம்எல்ஏ, மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு ஆகியோர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை சந்தித்து இந்த மேம்பாலப் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து பல மாதங்களாக கிடப்பில் கிடந்த இந்தப் பணி மீண்டும் தொடங்கப்பட்டு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கால்வாய் மேம்பாலப் பணி 95 சதவீதம் முடிந்துள்ளது. எஞ்சியுள்ள பணிகளும் இன்னும் ஒரு சில தினங்களில் முடிக்கப்பட்டு அடுத்த மாதம் மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்தனர். 6 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த மேம்பாலப் பணி முடிந்து அடுத்த மாதம் மேம்பாலம் திறக்கப்படும் என்ற செய்தி அப்பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாலை விரிவாக்கம்
மணலி காமராஜ் சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால் அலுவலக நேரங்களில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவொற்றியூர் – மணலி இடையே கால்வாய் மேம்பாலம் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும்போது காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கக் கூடும். இந்தப் பிரச்னையை தீர்க்க மணலி காமராஜ் சாலையை விரிவாக்கம் செய்ய மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கான ஆலோசனைக் கூட்டம் மணலி மண்டலக்குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் மணலி மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மண்டல உதவி ஆணையர் கோவிந்தராசு, செயற்பொறியாளர் தீபக்குமார், உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன் மற்றும் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் கலந்துகொண்டு விரிவாக்கம் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

கிணற்றில் போட்ட கல்
பாலம் திறக்கப்படுவது பற்றி பொதுமக்கள் கூறியதாவது: 2016ம் ஆரம்பிக்கப்பட்டு 2018ல் முடிக்கப்பட வேண்டிய இந்த பாலப்பணி கிடப்பில் போடப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானோம். இதை விரைந்து முடிக்கக் கோரி அதிமுக ஆட்சியில் மணலி வியாபாரிகள் சங்கம், பொதுமக்கள் என பலமுறை மனு கொடுத்தும், ஆர்ப்பாட்டம் நடத்தியும் அவை கிணற்றில் போட்ட கல்லாக பயனற்றுப் போயின. திமுக ஆட்சியில் துரித நடவடிக்கையால் பாலப்பணி விரைவு படுத்தப்பட்டு தற்போது திறக்கப்படுவது மிகவும் மகிழ்ச்சியும், நிம்மதியையும் கொடுக்கிறது. இதற்காக தமிழ்நாடு அரசு நன்றி என்று கூறினர்.

The post ₹52 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட திருவொற்றியூர் கால்வாய் மேம்பால பணி நிறைவு: அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும் என தகவல் appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Canal ,flyover ,Tiruvotiyur ,Thiruvotiyur ,
× RELATED முதல்வர் குடும்பம் குறித்து அவதூறு...