×

அண்ணன் தற்கொலை குறித்து விசாரிக்காததால் விரக்தி மோடிக்கு ஓட்டுப்போட்ட விரலை துண்டித்த சகோதரர்

தானே: பிரதமர் மோடிக்கு ஓட்டுப்போட்ட ஆட்காட்டி விரலை நபர் ஒருவர் துண்டித்துக் கொண்டார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. மகாராஷ்டிர மாநிலம் உல்லாஸ் நகரைச் சேர்ந்தவர் நந்துகுமார். இவர் பாஜ எம்எல்ஏ பப்பு கலானி மற்றும் சிவசேனா எம்எல்ஏ பாலாஜி கினிகார் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர். கடந்த 1ம் தேதியன்று, நந்துகுமார் மற்றும் அவரது மனைவி உஜ்வாலா நானாவரே ஆகியோர் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.

அவ்வாறு தற்கொலை செய்துகொள்ளும் போது வீடியோ பதிவு செய்திருந்தனர். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நந்துகுமாரின் சகோதரர் தனஞ்சய் நானாவரே போலீசில் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இந்த நிலையில், தனக்கு சொந்தமான கோழிப்பண்ணைக்கு சென்ற தனஞ்சய், தனது நடவடிக்கை எடுக்காத போலீசை கண்டித்து ஓட்டுப்போடும் ஆட்காட்டி விரலை வெட்டிக் கொண்டார். இதனை அவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டார்.

வீடியோவில் அவர் கூறியதாவது: எனது சகோதரர் மற்றும் அண்ணி ஆகியோர் கடந்த 1ம் தேதியன்று தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலைக்கான காரணம் தெரிந்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இருவரின் மரணத்துக்கும் நீதி வேண்டும். அதற்கு காணிக்கையாக மோடி மற்றும் ஷிண்டேவுக்கு வாக்களித்த ஆட்காட்டி விரலை துண்டிக்கிறேன். அண்ணன் மற்றும் அண்ணி தற்கொலை செய்ததற்கு காரணமான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், அடுத்தடுத்த வாரங்களில் தனது உடலின் ஒவ்வொரு பாகங்களாக வெட்டி, அரசுக்கு அனுப்பி வைப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. தானே குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் சிவ்தாஜ் பாட்டீல் கூறும்போது,’ தற்கொலை தொடர்பாக 4 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இதுதொடர்பாக சங்காராம் நிகல்ஜே உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது, தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தார்.

The post அண்ணன் தற்கொலை குறித்து விசாரிக்காததால் விரக்தி மோடிக்கு ஓட்டுப்போட்ட விரலை துண்டித்த சகோதரர் appeared first on Dinakaran.

Tags : Modi ,PM Modi ,
× RELATED சொல்லிட்டாங்க…