×

நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி ஆளுநர் செயல்பட முடியாது: ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி

வேலூர்: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மகாதேவமலை கோயிலில் நேற்று ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு பூரண‌ கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. புதிய ஸ்படிக கற்களால் ஆன கருப்பசாமி சிலையை அவர் திறந்துவைத்தார். பின்னர், கவர்னரிடம் நீட் தேர்வு ரத்து தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பாடு குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்து சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: ‘நாட்டின் அரசியல் சாசனப்படி தான் கவர்னர் செயல்படுகிறார். நீட் தேர்வு சட்டத்தை நிறைவேற்றியது காங்கிரஸ் ஆட்சியில் தான். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நீட்‌ தேர்வு நடைமுறையில் உள்ளது.

அதை புறக்கணித்து ஆளுநர் செயல்படமுடியாது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய சட்டத்தை எதிர்த்து ஆளுநர் செயல்படமுடியாது. எனவே எல்லாரும் ஒருங்கிணைந்து எது சாத்தியம், எது சாத்தியமில்லை என ஆராய்ந்து மக்களிடம் சொல்லி, மாணவர்களை தயார் செய்தால் மட்டுமே, எதிர்காலத்தில் கல்வியின் தரத்தை உயர்த்த முடியும். நீட் தேர்வை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தை அணுகி தீர்ப்பை பெற்றுக் கொள்ளலாம். சமீபத்தில் ரஜினிகாந்த் என்னை சந்தித்தார். இதில் ஆன்மிகத்தை தவிர வேறு எதுவும் உள்நோக்கம் இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும் என ராகுல் காந்தி இன்னும் 25 ஆண்டுகளுக்கு அப்படி தான்‌ பேசுவார் என்றார்.

The post நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி ஆளுநர் செயல்பட முடியாது: ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Governor ,Supreme Court ,Jharkhand ,CP Radhakrishnan ,Vellore ,C.P. Radhakrishnan ,Mahadevamalai temple ,Vellore district KV Kuppam.… ,
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...