×

‘அண்ணாமலை இரட்டை வேடம்’; தமிழக மக்களுக்கு எதிரான கட்சி பாஜ: பாலகிருஷ்ணன் தாக்கு

தர்மபுரி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில், காவிரி உபரிநீரை மாவட்ட ஏரிகளில் நிரப்பக்கோரியும், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியை கைவிடக்கோரியும், ஒகேனக்கல் முதல் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை பெரும்திரள் நடைபயணம் நடந்தது. கடந்த 16ம்தேதி தொடங்கிய நடைபயணம், நேற்று மாலை தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நிறைவடைந்தது. பின்னர், கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடகா அரசு, அளவு கடந்த மழை பெய்யும் காலங்களில், தண்ணீரை தேக்கி வைக்க வழியில்லாமல் உபரிநீரை திறந்து விடுகிறது. காவிரி நடுவர் மன்றம் 205 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை ஏற்க மறுத்து, கர்நாடகா உச்சநீதிமன்றம் சென்றது. உச்சநீதிமன்றம் விவாதித்து, இறுதியாக 174 டிஎம்சி தண்ணீர் வழங்கலாம் என தீர்ப்பு அளித்தது. போதிய மழை இல்லை என்றால், தண்ணீர் கொடுப்பதற்கு வழிமுறையும் சொல்லியிருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளில், இந்த வழக்குக்காக தமிழக அரசு ரூ.1000 கோடி வரை செலவழித்துள்ளது.

இந்த தீர்ப்பு வந்த பிறகு, மேகதாதுவில் அணை கட்டுவோம், என அன்றைய பாஜ கர்நாடகா அரசு கூறியது. தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என கர்நாடகாவில் போராட்டம் நடத்துகின்றனர். தமிழகத்திற்கு தண்ணீர் தரவேண்டும் என, அண்ணாமலை இரட்டை வேஷம் போடுகிறார். பாஜ தமிழக மக்களுக்கு எதிரான கட்சி. மேகதாதுவில் அணை கட்ட முயற்சித்தால், தமிழகமே ஒன்று திரண்டு போராடும். விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள தர்மபுரி மாவட்ட மக்களுக்கு, வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் ஒகேனக்கல் உபரிநீர் திட்டத்தை, அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். இதற்காக தமிழக முதல்வரை சந்தித்து வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post ‘அண்ணாமலை இரட்டை வேடம்’; தமிழக மக்களுக்கு எதிரான கட்சி பாஜ: பாலகிருஷ்ணன் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,BJP ,Balakrishnan ,Dharmapuri ,Marxist Communist Party ,Karnataka government ,Cauvery ,Meghadatu ,Balakrishnan Thakku ,
× RELATED தடையை மீறி ஆர்ப்பாட்டம் பாஜவினர் கைது