×

நீட் தேர்வைத் திணிக்கும் பா.ஜ.க. அரசு, ஆளுநரைக் கண்டித்து நாளை உண்ணாவிரத போராட்டம்: அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி பங்கேற்பு

சென்னை: தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ள நீட் தேர்வைத் திணிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, ஆளுநரைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் தி.மு.கழகத்தின் இளைஞர் அணி மாணவர் அணி மருத்துவ அணி சார்பில், தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் கழக மாநிலங்களிலும் நாளை (20-08-2023 – ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் உண்ணாவிரத அறப்போர் நடைபெற உள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ள இந்த உண்ணாவிரத அறப்போரில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாணவ – மாணவியர், அவர்களின் பெற்றோர், கல்வியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், கலந்து கொள்கிறார்கள்.

நீட் தேர்வுக்கு எதிரான ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையில் தன்னார்வலர்களும் பொது மக்களும் தங்களின் மேலான கருத்துகளை எடுத்துரைப்பார்கள். அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளை உள்ளிட்ட கழகங்களின் நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள, அணிகளின் நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொள்கிறார்கள். உண்ணாவிரத அறப்போராட்டப் பணிகளை இளைஞர் அணி மாணவர் அணி மருத்துவ அணிகளின் மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஒருங்கிணைக்கின்றனர்.

சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கழக இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்கிறார். இந்த அறப்போராட்டத்தை கழக பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தொடங்கிவைக்கிறார்.

அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அணிகளின் தலைவர்கள், இணை – துணை தலைவர்கள், இணை – துணை செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்பட உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கலந்துகொள்பவர்களின் விவரம் தலைமைக் கழக ஒப்புதலோடு அறிவிக்கப்படுகிறது.

The post நீட் தேர்வைத் திணிக்கும் பா.ஜ.க. அரசு, ஆளுநரைக் கண்டித்து நாளை உண்ணாவிரத போராட்டம்: அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : J.J. ,G.K. Govt ,Ministers ,Thurayamurugan ,Udhayanidhi ,Chennai ,Tamil Nadu ,Udhayanidi ,
× RELATED முன்னாள் பிரதமர்கள் நாட்டின்...