×

இந்த வார விசேஷங்கள்

மதுரையில் ஆவணி பெருவிழா 19.8.2023 – சனி

சிவபெருமானின் திருவிளையாடல்களை மையமாக வைத்து ஆவணி மூலத்திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கொண்டாடப்படுகிறது. 64 திருவிளையாடல்களில் 12 முக்கிய திருவிளையாடல் லீலைகள் இந்த திருவிழாவை முன்னிட்டு நடைபெறும். முதல்நாளன்று கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை நடைபெறுகிறது. 2. நாரைக்கு மோட்சம் அளித்தல், 3. மாணிக்கம் விற்றல், 4. தருமிக்கு பொற்கிழி அருளியது, 5. உலவாக்கோட்டை அருளியது, 6. பாணனுக்கு அங்கம் வெட்டியது மற்றும் திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தல வரலாறு திருவிளையாடல், 7. வளையல் விற்றல், 8. நரியை பரியாக்கியது, 9. பிட்டுக்கு மண் சுமந்த லீலை, 10. விறகு விற்ற படலம் ஆகிய திருவிளையாடல் நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

நாக சதுர்த்தி 20.8.2023 – ஞாயிறு

ஆடி மாதத்தில் வருகின்ற வளர்பிறை நான்காவது நாளாகிய சதுர்த்தி நாளுக்கு ஒரு சிறப்புண்டு. இந்த நாளுக்கு, நாக சதுர்த்தி நாள் என்று பெயர். அதற்கு அடுத்த நாள் (21.8.2023) பஞ்சமி திதி வருவதால் நாகபஞ்சமி தினமாகக் கொண்டாடுவார்கள். இதே நாள் கருடனுக்கும் உரிய நாள் என்பதால் கருட பஞ்சமி தினமாகவும் கோயில்களில் அனுஷ்டிப்பார்கள். நாகமும் கருடனும் ஒன்றுக் கொன்று பகை என்றாலும், இருவரையும் கொண்டாடும் நாளாக நாகபஞ்சமி நாளும் கருட பஞ்சமி நாளும் இணைந்து இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பகையை மறந்தால்தான் ஒருவர் வளர்ச்சி பெற முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த இரண்டு விழாக்களும் இணைந்து வருவது. நாக சதுர்த்தி நாகங்களை வழிபடுவதற்கான நாள். இந்தநாளில் விரதமிருந்து நாகப் பிரதிமைகளுக்கு பூசை செய்கின்றனர்.

பெண்கள், வெள்ளிக்கிழமை வந்துவிட்டால், புற்றுக்குச் சென்று, பால் வைத்து வணங்குவதும், பூக்களைச் சொரிந்து வணங்குவதும், பக்கத்திலே அம்மன் கோயில் இருந்தால் வணங்குவதும் இயல்பாகவே செய்வார்கள். சதுர்த்தி என்பது, விநாயகருக்கு உரிய நாள். நாகசதுர்த்தி அன்று ஒரு விநாயகர் கோயிலுக்கும் சென்று, வணங்கினால் நாக சதுர்த்தி விரதம் பூரணத்துவம் பெற்றுவிடும். பாலை எடுத்துக் கொண்டு சென்று, அம்மன் கோயிலுக்கு அபிஷேகத்துக்குக் கொடுக்கலாம்.

பாம்பு புற்றுக்கு பால் சொரிந்து வரலாம். மஞ்சள் குங்குமம் வைத்து வாசனையுள்ள புஷ்பங்களால் அர்ச்சனை செய்யலாம். மிக எளிமையான பூஜை இது. மஞ்சள் பொடியும், குங்குமமும், இரண்டு வாழைப்பழமும் போதும். இதை வைத்து, பிரார்த்தனை செய்தால், நாகதோஷங்கள் எல்லாம் விலகிவிடும். எல்லா கோயில்களிலும், பெரும்பாலும் அரச மரத்தடியில் நாகபிரதிஷ்டைகள் இருக்கும். நாகப் பிரதிஷ்டம் என்பது ஆண் பாம்பும் பெண் பாம்பும், நாகப் பாம்பும், சாரைப் பாம்பும் இணைவது போன்று கல்லில் வடித்து அரசும், வேம்பும் சேர்ந்திருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தால் விசேஷம் என்று மனுநீதி என்ற நூலில் கூறப்பட்டிருக்கிறது. அந்த நாக பிரதிஷ்டையை மஞ்சள், குங்குமம் சாத்தி, வணங்க வேண்டும்.

காலையில் சாப்பிடாமல், விரதத்தை இருந்து, நாகதேவதையை வணங்கிவிட்டு, வீட்டுக்கு வந்து, அதற்கு பிறகு, நீங்கள் உங்களுடைய உணவை உட்கொள்வது என்பது, இந்த விரதத்தினுடைய, ஒரு அடிப்படையான விஷயம். மஞ்சள் சரடு, நாகதேவதை பிம்பம் மீது வைத்து பூஜை செய்து, பின் அதை கழுத்திலே அணிந்து கொள்வார்கள். கையிலே கட்டிக் கொள்வார்கள். இப்படி பல விதமான முறைகள் எல்லாம் இருக்கின்றன.

கருட ஜெயந்தி 22.8.2023 – செவ்வாய்

கருடன் வேதம். கருடனை வணங்கினால் வேதத்தை வணங்கியதாகப் பொருள். கருட வழிபாடு ஆவணி சுவாதியில் வரும். அதோடு இன்று செவ்வாய் சஷ்டி விரதமும் இருக்கிறது. பெருமாள் கோயிலுக்கு செல்பவர்கள் பெருமாளை வழிபடுவதற்கு முன் வணங்க வேண்டிய தெய்வம்தான் கருடாழ்வார். பொதுவாக பெருமாள் திருத்தலங்களுக்குச் செல்பவர்கள் நேராக பெருமாளையும், அனுமனையும், சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டு வருவது வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆனால், வைணவ ஆகம விதிப்படி கருடரை வழிபட்ட பின்னர்தான் பெருமாளை வழிபட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பெருமாள் கோயில் மட்டுமல்லாமல், மற்ற கோயில்களில் கும்பாபிஷேகத்தின் போது வந்து கருடன் வட்டமிட்டால் தான் அந்த கும்பாபிஷேகம் முழுமை அடைந்ததாக, முடிந்ததாக அர்த்தம். கருட வழிபாடு நாக தோஷத்தை நீக்குவது மட்டுமல்லாது, வியாதிகளை நீக்கும், மரண பயத்தை நீக்கும் வல்லமை வாய்ந்தது. குழந்தை பேறு கிட்டும். இன்று பெருமாள் கோயில்களில் விசேஷ திருமஞ்சனம் நடக்கும். கலந்து கொள்ளுங்கள். சர்ப்பதோஷம் நீங்க, விஷம் நீங்க ஸ்ரீகருட காயத்ரி ஜெபம் செய்யுங்கள்.
ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸ்வர்ண பக்ஷாய தீமஹி
தன்னோ கருட ப்ரசோதயாத்

குலச்சிறை நாயனார் குரு பூஜை 24.8.2023 – வியாழக்கிழமை

இன்று குரு வாரம். மகான்களையும் குருமார்களையும் தரிசிக்க வேண்டிய தினம். பல சிவாலயங்களில் இன்று குலச்சிறையார் குரு பூஜை நடக்கும்.

கோதில்புகழ் தருமணமேற் குடியார்
கோவண்
குலச்சிறையார் தென்னர்குல வமைச்சர்
குன்றா
மாதவர்க ளடிபரவு மரபார் பாண்டி
மாதேவி யாரருள்வான் பயிர்க்கு வேலி
காதன்மிகு கவுணியர்கோன்
வாதிற்றோற்ற
கையரைவை கைக்கரைசேர்
கழுவிலேற்று
நீதியினா ராலவாய் நிமலர்ச் சேர்ந்த
நின்மலனா ரென்மலங்க ணீக்கி னாரே.
என்பது அவர் வரலாற்றை சுருக்கமாகச் சொல்லும் பாடல்.

சிவத் தொண்டு என்பது சிவனடியார்களுக்குச் செய்யும் தொண்டு. ‘‘கூடும் அன்பினில் கும்பிடல் அன்றி வீடும் வேண்டா’’ என்று சிவனடியார்களைப் பற்றிச் சொல்லுவார்கள். சிவதொண்டு என்ற தவத்தொண்டு மன நிலையில் இருந்த ஒரு அடியார்தான் குலச்சிறையார். பாண்டியநாட்டில் மண மேல்குடி என்ற ஊரில் அவதரித்தவர். பெருநம்பி என்று போற்றப்பட்டவர். சிவனடியார்களிடம் மிகுந்த பக்தி கொண்டவர். அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உபசாரம் செய்து அதுவே சிவத்தொண்டு என்று மனநிறைவு காண்பவர். நின்றசீர் நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னனின் முதல் அமைச்சராக இருந்தார். மன்னன் சமண நெறியில் இருந்தாலும், தான் வழிவழியாகப் பின்பற்றி வந்த சைவ நெறியில் இருந்து வழுவாமல் இருந்தார். சமயம் வருகின்ற பொழுது மன்னனையும் மாற்ற வேண்டும் என்று தினசரி ஆலவாய் அண்ணலிடம் பிரார்த்தனை செய்வார்.

ஒருமுறை திருஞானசம்பந்தர் திருமறைக்காடு என்ற ஊரில் தங்கி இருப்பதை அறிந்த குலச்சிறை நாயனார், அவரைச் சென்று பணிந்து மகிழ்ந்தார். பாண்டிய மன்னனின் துணைவியான பாண்டிமாதேவியிடம் சொல்லி அவரை பாண்டி நாட்டுக்கு வரவழைக்க வேண்டும் என்று விரும்பினார். அப்படி வந்த பொழுது அவருக்குக் கடுமையான பல சோதனைகள் ஏற்பட்டன. சமணர்களை எதிர்த்து வாதம் புரிந்தனர். சம்பந்தர் தங்கியிருந்த மடத்துக்குத் தீ வைத்தனர். இத்தனையும் தாண்டி அவர் பாண்டி நாட்டில் மன்னனையும் மாற்றி சைவத்தையும் பரப்பினார். அதற்கு துணை புரிந்தவர் குலச்சிறையார். கடுமையான சோதனைகளுக்கு நடுவிலே பாண்டிய நாட்டில் சைவ நெறியைப் பரப்பியவர் என்பதால் இவருக்கு நாயன்மார் அந்தஸ்து கிடைத்தது. அவருடைய குருபூஜை தினம் ஆவணி மாதம் அனுஷ நட்சத்திரம். இன்று.

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Avani Festival ,Madurai ,Avani Moolatri Festival ,Meenakshi Amman ,Shani Shiva ,Dinakaran ,
× RELATED உலகளாவிய மலை வழிபாடு