×

திருநங்கைகள் வசிக்கும் பகுதியில் சிசிடிவி கேமரா அமைக்கப்படும் குறை தீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்

நெல்லை, ஆக. 19: நெல்லை கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில், மாவட்ட சமூக நலத்துறை சார்பில், திருநங்கைகளுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது: திருநங்கைகள் தங்கள் பகுதிகளில் தண்ணீர், சாலை வசதி, தெருவிளக்கு மற்றும் அவர்கள் வசிக்கும் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும், திருநங்கைகள் வளர்க்கும் ஆடு, மாடுகள், மழை மற்றும் கோடை காலங்களில் அடைப்பதற்கு கொட்டகை அமைப்பதற்கும் கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் திருநங்கைகளுக்கு மத்திய, மாநில அரசு மானியத்துடன் வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருநங்கைகள் வசிக்கும் பகுதியில் தெரு விளக்கு, குடிநீர் வசதி, சிசிடிவி கேமரா அமைத்தல் ஆகியவை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சிறு, குறு தொழில் மூலம் 35 சதவீதம் மானியத்துடன் கடன்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். மேலும் பெட்டிக்கடை வைப்பதற்கு 5 முதல் 6 சதவீதம் மானியத்துடன் ரூ.20 ஆயிரம் வழங்கி தொழில் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். சட்டப்படி நியாயமான வாழ்வாதாரத்தை அரசு உதவியுடன் மாவட்ட நிர்வாகம் மூலம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் திருநங்கைகள் அளித்த கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

தொடர்ந்து நடந்த கூட்டத்தில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) ரேவதி, உதவி கலெக்டர் (பயிற்சி) கிஷன்குமார், மகளிர் திட்ட அலுவலர் சாந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் தனலெட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள், திருநங்கைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி பிறந்தநாளையொட்டி மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்துகொண்டனர்.

The post திருநங்கைகள் வசிக்கும் பகுதியில் சிசிடிவி கேமரா அமைக்கப்படும் குறை தீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Paddy ,Nellai Collector ,Office Development Forum ,District Social Welfare Department ,
× RELATED நெமிலி ஒன்றியத்தில் கோடை பயிர்...