×

எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்தது நீதிமன்ற இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது: அதிமுக வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் மனு

டெல்லி: எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்தது நீதிமன்ற இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்று அதிமுக வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த தகவல் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டு பின்னர் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரிக்கப்பட்டார்.

இதனிடையே, அதிமுக கட்சி விதிகளில் மாற்றங்கள் கொண்டு வந்ததை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்ததை எதிர்த்து வழக்குகள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது. ராம்குமார் ஆதித்தன், சுரேஷ் பழனிசாமி தாக்கல் செய்த வழக்கில் இன்று தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலராக இந்திய தேர்தல் ஆணையம், அவர்களது கோரிக்கையின் அடிப்படையில் மட்டும் அங்கீகரிக்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமி, ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு இடையிலான வழக்குகளில் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு அளிக்கப்பட்டது.

பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியதால் அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமியை அங்கீகரித்துள்ளோம்; கட்சி விதிகள் மாற்றத்தை அங்கீகரிக்க முடிவு செய்தோம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது எதிர்வரும் காலத்தில் நீதிமன்ற இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது. அதிமுக விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புதான் இறுதி முடிவு என்பதை தாங்கள் புரிந்து வைத்துள்ளோம் என்றும் தலைமை தேர்தல் ஆணையம் பதில் மனுவில் தகவல் தெரிவித்துள்ளது. நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் இருக்கும் பட்சத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தீர்ப்பு வந்தால், இந்திய தேர்தல் ஆணையம் தனது முடிவை மாற்றி கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.

The post எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்தது நீதிமன்ற இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது: அதிமுக வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் மனு appeared first on Dinakaran.

Tags : Edabadi Palanisamy ,Election Commission ,Addapadi Palanisami ,Delhi ,Addapadi Palanisamy ,Edapadi Palanisami ,Addapadi ,Dinakaran ,
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...