×

முதியவரை ஏளனமாக பேசிய வங்கி ரூ34,500 இழப்பீடு தர உத்தரவு

நாமக்கல், ஆக.18: கோவை மாவட்டம், வேலாண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மனைவி யசோதா (62), சாய்பாபா காலனியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். கடந்த 2017 மே மாதம், அவரது சேமிப்பு கணக்கில் ₹831ம், பிக்சட் டெபாசிட் கணக்கில் ₹1.44 லட்சம் இருந்துள்ளது. கடந்த 2017 மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, வாடிக்கையாளர் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்கவில்லை எனக்கூறி, ஒவ்வொரு மாதத்திற்கும் ₹50 முதல் 60 வரை அபராதம் விதித்து, சேமிப்பு கணக்கில் இருந்து வங்கி பிடித்தம் செய்துள்ளது. இவ்வாறு அபராதம் விதித்தது தவறு என்று யசோதா வங்கியில் கேட்ட போது, 2018 ஜனவரி முதல் வாரத்தில் அபராதமாக பிடித்தம் செய்யப்பட்ட தொகையை, வங்கி மீண்டும் அவரது கணக்கில் வரவு வைத்தது.

ஆனால், 2018 பிப்ரவரி மாதத்துக்கு பிடித்தம் செய்த அபராத தொகையை, வங்கி திரும்ப வழங்கவில்லை. இதனால் யசோதா, தனது கணவர் மூலமாக கடந்த 2018ம் ஆண்டு, கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், வங்கி மீது வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விரைவான விசாரணைக்காக நாமக்கல் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் விசாரணை முடிவடைந்து, நீதிபதி டாக்டர் ராமராஜ் நேற்று தீர்ப்பளித்தார். அதன் விபரம் வருமாறு: வாடிக்கையாளர் யசோதாவின் கணவர் சண்முகசுந்தரம்(65), வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில், சண்முக சுந்தரத்துக்கு வேறு வேலை இல்லாததால், தீய வழியில் பணம் சம்பாதிக்க, வழக்கு தாக்கல் செய்துள்ளார் என்ற வங்கி நிர்வாகத்தின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது.

வங்கியின் செயல் நுகர்வோர் உரிமைகளுக்கு எதிரானது. மேலும், சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்கவில்லை எனக்கூறி, வங்கி கணக்கில் இருந்து எடுத்துக்கொண்ட ₹34.50 மற்றும் வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ₹34,500ஐ சேர்த்து 4 வாரங்களுக்குள், வங்கி வழக்கு தாக்கல் செய்தவருக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

The post முதியவரை ஏளனமாக பேசிய வங்கி ரூ34,500 இழப்பீடு தர உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Shanmugasundaram ,Velandipalayam, Coimbatore ,Yashoda ,Bharat ,Saibaba Colony ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...