×

ரூ139 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

நாமக்கல், ஆக.18: போதமலையில் 31 கி.மீ., தூரத்துக்கு ₹139 கோடியில் சாலை அமைக்க அரசாணை வெளியிட்ட முதல்வருக்கு, ராஜேஸ்குமார் எம்பி., நன்றி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் கீழுர் ஊராட்சியில் போதமலை மலை கிராமம் உள்ளது. இங்கு கீழூர், மேலூர், கெடமலை என 3 குக்கிராமங்கள் உள்ளன. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். இந்த மலை கிராமங்களுக்கு செல்ல, நாடு சுதந்திரம் அடைந்தது முதல் சாலை வசதி அமைக்கப்படவில்லை. போதமலையில் தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம், ரேஷன் கடை போன்றவை உள்ளது. சாலை வசதிகள் இல்லாத காரணத்தினால், இங்கு வசிக்கும் மக்கள் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து உள்ளனர். ஆனால் விவசாயத்தை கவனிக்க மலை கிராமங்களுக்கு மக்கள் அடிவாரத்தில் இருந்து கால்நடையாக சுமார் 8 கிமீ துரம் வந்து செல்கிறார்கள்.

போதைமலைக்கு செல்ல சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். திமுக ஆட்சி அமைந்தவுடன் போதமலைக்கு சாலை வசதி அமைத்து கொடுக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற உடன், போதமலைக்கு சாலை அமைக்கும் பணிக்கு தேவையான சட்ட நடவடிக்கையை மேற்கொண்டது. பசுமை தீர்ப்பாயத்திலும் இது தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டது. பல்வேறு விதிமுறைகளுடன் போதமலையில் சாலை அமைக்க அனுமதியளித்து, கடந்த சில மாதங்களுக்கு முன் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, ஒன்றிய அரசின் வனத்துறை, தமிழக அரசின் வனத்துறை போதமைலைக்கு சாலை அமைக்கும் பணிக்கு அனுமதி அளித்தது.

வடுகம் முதல் கீழுர் வழியே மேலூர் வரை 21.17 கிமீ தொலைவிற்கும், புதுப்பட்டி முதல் கெடமலை வரை 9.9 கிமீ தெலைவிற்கும் சாலைகள் அமைக்கப்படுகிறது. போதமலைக்கு சாலை அமைப்பதற்கு ₹139 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, தற்போது தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராஜேஸ்குமார் எம்பி கூறியதாவது: நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஒன்றியம், போதமலை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி கொடுக்கும் வகையில், சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதற்காக ₹139 கோடி அரசு நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி துறை இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.

வடுகத்தில் இருந்து மேலூர் வரை 21 கி.மீ., தொலைவிற்கு ஒரு சாலை ₹105 கோடியிலும், புதுப்பட்டியில் இருந்து கெடமலை வரை 10 கி.மீ., தொலைவிற்கு ₹34 கோடியில் மற்றொரு சாலையும் அமைக்கப்படுகிறது. மொத்தம் 31.70 கிமீ தூரத்திற்கு ₹139 கோடியே 65 லட்சத்தில் சாலை அமைக்கப்படுகிறது. அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மேலும் இதற்கு உறுதுணையாக இருந்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோருக்கும் இத்திட்டதிற்கு பெரிதும் முயற்சி எடுத்து இந்த அரசாணை வெளிவர காரணமாக இருந்த விளையாட்டு மற்றும் சிறப்பு செயலாக்க துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு, நாமக்கல் போதமலை மலைவாழ் மக்கள் மற்றும் மாவட்ட பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு ராஜேஸ்குமார் எம்.பி., தெரிவித்தார்.

The post ரூ139 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Minister ,Bodhamalai, ,Rajeskumar ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...