×

கப்பல் கட்டுவதில் ஐ.என்.எஸ். விந்தியகிரி தற்சார்பு இந்தியாவின் அடையாளம்: ஜனாதிபதி முர்மு பெருமிதம்

கொல்கத்தா: உள்நாட்டில் தயாரான விந்தியகிரி, கப்பல் கட்டும் திறனில் தற்சார்பு இந்தியாவின் அடையாளமாகும் என்று ஜனாதிபதி முர்மு பெருமையுடன் கூறினார். மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப்யார்டில் நடந்த இந்தியக் கடற்படையின் புராஜெக்ட் 17 ஆல்பா திட்டத்தின் 6-வது கப்பலான விந்தியகிரியின் வெள்ளோட்டத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அம்மாநில ஆளுநர் சிவி. ஆனந்த போஸ், முதல்வர் மம்தா பானர்ஜி, கடற்படை மற்றும் அரசு மூத்த உயரதிகாரிகள் பங்கேற்றனர்.அப்போது பேசிய ஜனாதிபதி, “விந்தியகிரியின் வெள்ளோட்டம் இந்தியாவின் கடல்சார் திறன்கள் அடுத்த கட்ட மேம்பாட்டை நோக்கி முன்னேறுவதைக் காட்டுகிறது. இது தற்சார்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.

உள்நாட்டில் தயாரான ஐஎன்எஸ். விந்தியகிரி, கப்பல் கட்டும் திறனில் தற்சார்பு இந்தியாவின் அடையாளமாக விளங்குகிறது. இந்தியா இன்று உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக உள்ளது. எதிர்காலத்தில் 3-வது பெரிய பொருளாதாரமாக மாற அரசு முயற்சித்து வருகிறது. வளர்ந்து வரும் பொருளாதாரம் என்பது அதிக அளவிலான வர்த்தகமாகும். இந்தியாவில் உற்பத்தியாகும் வர்த்தகப் பொருட்களில் பெரும்பகுதி கடல்கள் வழியாக கொண்டு செல்லப்படுகின்றன. இது இந்தியாவின் வளர்ச்சி மற்றும் நல்வாழ்விற்குப் பெருங்கடல்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்தியப் பெருங்கடல் மற்றும் மிகப் பெரிய இந்தோ-பசிபிக் பிராந்தியம் பல அம்சங்களைக் கொண்டுள்ளன. இதில் இந்தியாவின் கடல்சார் நலன்களை இந்திய கப்பற்படை பாதுகாத்து வருகிறது,’’ என்று கூறினார்.

The post கப்பல் கட்டுவதில் ஐ.என்.எஸ். விந்தியகிரி தற்சார்பு இந்தியாவின் அடையாளம்: ஜனாதிபதி முர்மு பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : India ,President Murmu Proud ,Kolkata ,President ,Murmu ,Vinthiyagiri ,President Murmu Pride ,
× RELATED சமத்துவ இந்தியா உருவாக...