திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் சார்பதிவாளரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக, அதிமுக மாஜி அமைச்சர் இன்பத்தமிழன் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் சார்பதிவாளராக இருப்பவர் முத்துச்சாமி (55). இவர், நகர் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த மாதம் 21ம் தேதி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அதிமுகவை சேர்ந்த மாஜி அமைச்சர் இன்பத்தமிழன், ‘ஒரு நபரை அனுப்புவேன், அவரிடம் ரூ.10 ஆயிரம் கொடுத்து அனுப்புங்கள்’ என்று கூறினார்.
இதற்கு நான் பணம் தர இயலாது என்று கூறினேன். உடனே சிறிது நேரத்தில் எனது அலுவலகத்துக்கு வந்த இன்பத்தமிழன், ‘நான் கேட்டது என்ன ஆச்சு’ என்றார். அப்போது நான் அரசியல் கட்சிக்காரர்களுக்கு பணம் தர இயலாது என்றேன். இதையடுத்து உங்களை விஜிலென்ஸில் புகார் செய்வேன் என இன்பத்தமிழன் மிரட்டினார். அரசு ஊழியரான என் மீது தேவையில்லாமல் புகார் அனுப்பி அச்சுறுத்தி வரும் மாஜி அமைச்சர் இன்பத்தமிழன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்பேரில், நகர் போலீசார் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post சார்பதிவாளரிடம் பணம் கேட்டு மிரட்டல் அதிமுக மாஜி அமைச்சர் இன்பத்தமிழன் மீது வழக்கு appeared first on Dinakaran.
