×

செங்குன்றம் அருகே பரபரப்பு; அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சரமாரி வெட்டி கொலை: மர்ம கும்பலுக்கு போலீசார் வலை

சென்னை: செங்குன்றம் அருகே அதிமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கத்தியால் சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சென்னை அருகில் உள்ள செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் திலகர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (53). இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களின் ஒரு மகன் டாக்டராகவும், மற்றொரு மகன் வழக்கறிஞராகவும் உள்ளனர். பார்த்திபன், 2011, 2016ம் ஆண்டுகளில் பாடியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராகவும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக அம்மா பேரவை இணை செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில், பார்த்திபன் நேற்று காலை 6.30 மணியளவில் பாடியநல்லூர் அங்காள பரமேஸ்வரி விளையாட்டு திடலில் நண்பருடன் நடைபயிற்சியில் இருந்தார்.

அப்போது 2 பைக்கில் அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் பார்த்திபனை வழிமறித்து சரமாரியாக கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்ய முயன்றது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அந்த மர்ம கும்பல் விடாமல் அவரை துரத்தி சென்று, சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. இதை பார்த்து, அங்கு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் அலறியடித்தவாறு ஓடினர். இதில், படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், அக்கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் பைக்கில் ஏறி தப்பிச்சென்றது.

இதைப் பார்த்து, அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக செங்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், பார்த்திபன் சடலத்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் நடந்த விளையாட்டு திடலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தப்பிய 4 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். இப்பகுதியில் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்கவும், பதற்றத்தை தணிக்கவும் பாடியநல்லூர் பகுதியில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாடியநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. தற்போது பார்த்திபனின் அண்ணி ஜெயலட்சுமி பாடியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

6 தனிப்படைகள் அமைப்பு
பாடியநல்லூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பார்த்திபன் கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை கைது செய்ய ஆவடி காவல் இணை ஆணையர் விஜயகுமார், செங்குன்றம் துணை ஆணையர் கே.எஸ்.பாலகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

The post செங்குன்றம் அருகே பரபரப்பு; அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சரமாரி வெட்டி கொலை: மர்ம கும்பலுக்கு போலீசார் வலை appeared first on Dinakaran.

Tags : Bustle ,Senkunram ,AIADMK ,panchayat council ,president ,Chennai ,Sengunram ,panchayat ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ரூ.7...