×

1.9 லட்சம் பேரிடம் ரூ2,438 கோடி மோசடி வழக்கு: நடிகர் ஆர்.கே.சுரேஷை கைது செய்யும் பணி தீவிரம்

* கைது செய்து இந்தியா அழைத்து வர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் தீவிரம்
* வெளிநாட்டில் உள்ள சொத்துகளை முடக்கவும் நடவடிக்கை

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 1.9 லட்சம் பேரிடம் ரூ2,438 கோடி மோசடி வழக்கில், துபாயில் தனது குடும்பத்துடன் 6 மாதங்களுக்கு ேமலாக தலைமறைவாக உள்ள நடிகர் ஆர்.கே.சுரேஷை பிடிக்க வெளிநாடுகளுக்கு இடையேயான சர்வதேச பரஸ்பர சட்ட ஒப்பந்த அடிப்படையில், துபாய் நாட்டு அதிகாரிகள் உதவியுடன் கைது செய்ய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், அவர்களின் வெளிநாட்டு சொத்துகளை முடக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இயங்கி வந்த ஆருத்ரா நிதி நிறுவனம் பொதுமக்கள் 1.9 லட்சம் பேரிடம் ரூ2,438 கோடி மோசடி செய்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அளித்த புகாரின்படி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா மற்றும் அதன் 5 துணை நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர் ராஜசேகர், அவரது மனைவியும் இயக்குநரான உஷா, மேலாண் இயக்குநர்கள், இயக்குநர்கள் முக்கிய ஏஜென்ட்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில், இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில்குமார், பட்டாபிராம், மைக்கேல்ராஜ் உள்பட மொத்தம் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நிதிநிறுவன உரிமையாளர் ராஜசேகர் மற்றும் அவரது மனைவி உஷா வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டனர். அவர்களை இன்டர்போல் மூலம் கைது செய்ய ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆருத்ரா உரிமையாளர் ராஜேசேகர் மற்றும் அவரது மனைவி உஷா ராஜேசேகர் மற்றும் முக்கிய நிர்வாகிகளை வழக்கில் இருந்து விடுக்க ரூ15 கோடி பணத்தை பாஜ நிர்வாகி மற்றும் திரைப்பட நடிகர் ஆர்.கே.சுரேஷ் வங்கி கணக்குகள் மூலம் வாங்கியது விசாரணையில் தெரியவந்தது. இது நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்கும்படி நடிகர் ஆர்.கே.சுரேசுக்கு பொருளாதார குற்றப்பிரிவு சம்மன் அனுப்பியது. ஆனால், கடந்த 6 மாதங்களாக விளக்கம் அளிக்காமலும், ஆஜராகமாலும் ஆர்.கே.சுரேஷ் துபாயில் தனது குடும்பத்துடன் தலைமறைவாக உள்ளார்.

அவரை கைது செய்ய ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டில் குற்றம் செய்துவிட்டு வெளிநாடுகளில் பதுங்கி உள்ள இந்தியாவில் குற்றம் செய்தவர்களை கைது செய்யும் வகையிலும், வெளிநாட்டு சொத்துக்களை முடக்கவும், சர்வதேச பரஸ்பர சட்ட ஒப்பந்தம் (எம்லாட்) அடிப்படையில் துபாயில் பதுங்கி உள்ள நடிகர் ஆர்.கே.சுரேஷ் மற்றும் ஆருத்ரா உரிமையாளர் ராஜசேகர் மற்றும் அவரது மனைவி உஷா ராஜேசேகரை கைது செய்ய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முயற்சி எடுத்துள்ளனர். இதற்கான கடிதம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் துபாய் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கடிதத்தின் மூலம் விரைவில் துபாயில் பதுங்கி உள்ள ஆர்.கே.சுரேஷ் மற்றும் ஆருத்ரா உரிமையாளர் ராஜசேகரன் மற்றும் அவரது மனைவி உஷா உள்ளிட்டோரை துபாய் போலீசார் உதவியுடன் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நாடு கடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் வெளிநாட்டில் உள்ள அவர்களின் சொத்துகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 1.9 லட்சம் பேரிடம் ரூ2,438 கோடி மோசடி வழக்கு: நடிகர் ஆர்.கே.சுரேஷை கைது செய்யும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : RK Suresh ,Economic Crimes Police ,India ,Dinakaran ,
× RELATED பண மோசடி வழக்கில் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா சகோதரர் கைது!