×

கருட வாகனத்தில் சனி பகவான்

கருட வாகனத்தில் சனி பகவான்

பொதுவாகவே காக்கா வாகனத்துடன்தான் சனி பகவான் காணப்படுவார். ஆனால், குருத்தலமாக விளங்கும் ஆலங்குடி தலத்தில் அவருக்கு வாகனம், கருடன்! இந்தத் தலத்தில் ஈசன் ஆபத்சகாயேஸ்வரராக அருளாட்சி புரிகிறார்.

கண்ணீர் பெருக்கும் கருடாழ்வார்

சாதாரணமாக எல்லா வைணவத் தலங்களிலும் கருவறையில் இருக்கும் மூர்த்தத்தைவிட கருடாழ்வார் உயரம் குறைவாகத்தான் இருக்கும். ஆனால், ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சூலூர்பேட்டை- காளஹஸ்தி பாதையில் 5 கி.மீ. தொலைவில் உள்ள மன்னார் போளூர் கிருஷ்ணசுவாமி கோயிலில், கிருஷ்ண பகவானைவிட கருடாழ்வார் உயரம் அதிகம். ஆகவே, இவர் தரை மட்டத்திற்குக் கீழே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணனின் கருணையை வியந்து, கண்களிலிருந்து நீர் பெருகி, கன்னங்களை நனைக்கும் இந்தத் தோற்றம் நெகிழ்ச்சியானது.

தர்ம வாள்

ராவணன் கையில் வைத்திருந்த வாள் அவனுக்கு சிவபெருமானால் அருளப்பட்டது. அதன் பெயர் சந்திரஹாசம். அந்த வாளை வைத்திருந்தவரை யாராலும் அவனை வெல்ல முடியவில்லை. அதே சமயம் அந்த சந்திரஹாச வாளைத் தர்மத்தை காப்பாற்ற மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதர்மத்துக்குப் பயன்படுத்தினால் அது சக்தி இழந்து விடும். ராவணன் சீதையை ஆகாய மார்க்கமாகக் கவர்ந்து சென்றபோது அதைத் தடுத்த ஜடாயுவை அந்த வாளால் வெட்டி வீழ்த்தினான் ராவணன். அதிலிருந்து அந்த வாள் அவனுக்குப் பயன்படாது போயிற்று.

தொட்டில் வரமருளும் தூக்கப் பிரார்த்தனை

பொதுவாக கோயில்களில் சுவாமி தரிசனத்திற்கு பிறகு சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு வருவார்கள். ஆனால், இந்த கோயிலில் சுவாமி தரிசனத்துக்குப் பிறகு, சந்நதியில் ஒரு குட்டித் தூக்கமே போடலாம். இந்த அதிசய வழிபாட்டைக் கொண்டது, தமிழக – ஆந்திர எல்லையில் திருவள்ளூர் மாவட்டம், மாநெல்லூர் வீரபத்திரர் கோயில். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் கோயிலுக்கு அதிகாலையிலேயே வந்து 9 விரலி மஞ்சளை கையில் வைத்துக்கொண்டு, 9 முறை பிராகார வலம் வருகின்றனர். பின் அதை அம்பாள் பாதத்தில் வைத்துவிட்டு, சுவாமி சந்நதி எதிரில் படுத்து குட்டித் தூக்கம் போடுகின்றனர். இதனால் வீரபத்திரர் குழந்தை பாக்கியத்தை விரைவாக அருளுவார் என்று நம்புகின்றனர்.

விஸ்வாமித்திரர் உருவாக்கிய சிவாலயம்

விஸ்வாமித்திரரால் உருவக்கப்பட்ட சிவாலயம், நெல்லை – ராதாபுரம் வட்டம், இடிந்தகரைக்கு அருகே விஜயாபதி எனும் சிற்றூரில் அமைந்துள்ளது. ஈசன் காசி விஸ்வநாதராகவும் தேவி அகிலாண்டேஸ்வரியாகவும் அருள்கின்றனர்.

ஒரு சிற்பி, மூன்று அம்பிகைகள்

திருநாகேஸ்வரம் திருப்பட்டீஸ்வரம், திருப்புள்ளமங்கை ஆகிய கும்பகோணத்திற்கு அருகில் உள்ள மூன்று தலங்களிலும் துர்க்கையம்மன் அருள்பாலிக்கிறாள். இந்தக் கோயில்களை அடுத்தடுத்து தரிசிப்பவர்கள் அன்னையை உற்றுக் கவனித்தால் மூன்று சிலைகளிலும் ஒரே சாயலாக அமைந்திருப்பதைக் காணலாம். இதற்கு முக்கிய காரணம் இந்த மூன்று சிலைகளையும் வடித்தவர் ஒரே சிற்பிதான்.

மாணிக்கவாசகருக்கு உபதேசம்

பூலோக கயிலாயமாம் சிதம்பரம் திருத்தலத்தில் ஆனி மாத உத்திர நட்சத்திரத்தன்று மாணிக்கவாசகருக்கு நடராஜப் பெருமான் குருந்த மரத்தினடியில் உபதேசம் புரிந்த நிகழ்வு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. அன்றுதான் மாணிக்கவாசகர் ஈசனுடன் இரண்டறக்கலந்தார்.

திருப்புள்ள மங்கை

தேவர்கள் அமுதத்தைக் கடைந்த போது வெளிப்பட்ட நஞ்சை இறைவன் அமுதமாக உண்ட இடம் திருப்புள்ளமங்கை எனும் பசுபதி கோயில். இறைவன், பசுபதிநாதர். அன்னை, பால்வளை நாயகி. திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலம் இது. தஞ்சாவூருக்கு மிக அருகே உள்ள கோயில். தஞ்சை பேருந்து நிலையத்தில் இருந்து டவுன் பஸ் வசதி உண்டு.

தொகுப்பு: விஜயலட்சுமி

The post கருட வாகனத்தில் சனி பகவான் appeared first on Dinakaran.

Tags : Lord Shani ,Garuda ,Lord Saturn ,Alangudi Talam ,
× RELATED கருப்பண்ணசாமி, முனீஸ்வரர்...