×

திருப்பதியில் கடந்த 50 நாட்களில் 3 சிறுத்தைகள் கூண்டில் சிக்கின.. மரபணு சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு!!

திருமலை: திருப்பதி மலைப்பாதையில் வைக்கப்பட்ட கூண்டில் மற்றொரு சிறுத்தை ஒன்று சிக்கியுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த 6 வயது லட்ஷிதா என்ற சிறுமி மலைப்பாதையில் கடந்த 11ம்தேதி தனது பெற்றோருடன் சென்ற போது சிறுத்தை தாக்கியதில் இறந்தார். இதனையடுத்து திருப்பதி மலைப்பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்த தேவஸ்தான நிர்வாகம், சிறுத்தையை பிடிக்க பல்வேறு இடங்களில் கூண்டுகளை வைத்தது. அதன்படி கடந்த 3 நாட்களுக்கு முன்பு லட்சுமி நரசிம்ம சன்னதி அருகே வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கியது.

தற்போது அதே பகுதிக்கு அருகே வைத்து இருந்த கூண்டில் மற்றொரு சிறுத்தையும் சிக்கியது. கடந்த 50 நாட்களில் 3 சிறுத்தைகளை வனத்துறை அதிகாரிகள் கூண்டு வைத்து பிடித்துள்ளனர். முதலில் பிடிபட்ட சிறுத்தை மட்டும் பாக்ராபேட்டை வனப்பகுதியில் விடப்பட்டது. அடுத்ததாக சிக்கிய சிறுத்தை சிறுமியை கொன்றதாக இருக்கலாம் என கருதப்படுவதால் அவற்றின் ரத்தம், நகம், முடி உள்ளிட்டவை மரபணு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சோதனையில் மனித மாமிசம் சாப்பிட்டதற்கான தடையம் இருந்தால் அந்த சிறுத்தையை திருப்பதியில் உள்ள வன விலங்குகள் அருங்காட்சியகத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 3வதாக சிக்கிய சிறுத்தைக்கும் மரபணு சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்

The post திருப்பதியில் கடந்த 50 நாட்களில் 3 சிறுத்தைகள் கூண்டில் சிக்கின.. மரபணு சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு!! appeared first on Dinakaran.

Tags : Tiruppati ,Tirumalai ,Tirupati ,AP Nellore ,
× RELATED திருப்பதி கோயிலில் சாமி தரிசனம்...