×

வேளாண்மை குடியிருப்பு கட்டிடத்தை இடித்த பொதுமக்கள் தடுத்த அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஆரணியில் பரபரப்பு

ஆரணி, ஆக.17: ஆரணி அருகே வேளாண்மைத்துறை அலுவலர்கள் குடியிருப்பு கட்டிடத்தை பொதுமக்கள் ஜேசிபி மூலம் இடித்து அகற்றினர். அதனை தடுத்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கொசப்பாளையம் களத்து மேட்டுத்தெருவில் பல ஆண்டுகளுக்கு முன்பு, ஆரணி வேளாண்மை அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அரசு சார்பில் 5 குடியிருப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. அதில் வேளாண்மை அதிகாரிகள் தங்கி பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில், இந்த குடியிருப்பு கட்டிடங்களை கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தாமல் உள்ளதால் பாழடைந்து காணப்படுகிறது. இதனால், அங்கு செடி, கொடிகள் மற்றும் முட்புதர்கள் வளர்ந்து பாம்புகள் உட்பட விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அருகே வசிக்கும் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், அந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கடந்த சில ஆண்டுகளாக வேளாண்மைத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து வந்துள்ளனர். ஆனால், அவற்றை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதனால், நேற்று அப்பகுதி மக்கள் வேளாண்மை குடியிருப்பு பகுதியில் உள்ள முட்புதர்கள் மற்றும் கட்டிடங்களை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வேளாண்மை அலுவலர் பவித்ராதேவி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணியை தடுத்து நிறுத்தினர். ஆனாலும், ஏற்கனவே ஒரு கட்டிடம் இடித்து அகற்றப்பட்டுவிட்டது. தொடர்ந்து, அதிகாரிகள் அரசுக்கு சொந்தமான கட்டிடத்தை இடித்து அகற்றுவதற்கு யார் உங்களுக்கு அதிகாரம் அளித்தது என கேட்டதால் பொதுமக்களுடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், வருவாய்த்துறை மூலம் இடத்தை அளவீடு செய்து அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post வேளாண்மை குடியிருப்பு கட்டிடத்தை இடித்த பொதுமக்கள் தடுத்த அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஆரணியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Arani ,Department ,JCP ,Dinakaran ,
× RELATED ஜேசிபி, டிப்பர் லாரிகளை சிறைபிடித்த...