சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தில் ஞாயிறு தொடங்கி கன மழை பெய்து வருகின்றது.இதன் காரணமாக சம்மர் ஹில், கிருஷ்ணா நகர் மற்றும் பாக்லி பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட இடிபாடுகளில் ஏராளமான பொதுமக்கள் சிக்கினார்கள். இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் 56 ஆக இருந்தது. இந்நிலையில் சம்மர் ஹில் அருகே சிவன்கோயில் இடிந்த இடத்தில் இடிபாடுகளில் இருந்து நேற்று பெண் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. இதுவரையில் சம்மர் ஹில் பகுதியில் இருந்து 13 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
பாக்லியில் 5 சடலங்கள் மற்றும் கிருஷ்ணா நகரில் இருந்து 2 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 10 சடலங்கள் இடிபாடுகளில் சிக்கி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது. கிருஷ்ணாநகரில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலச்சரிவில் 8 வீடுகள் மண்ணில் புதைந்தன. இரண்டு பேர் உயிரிழந்தனர். இதனிடையே மோசமான வானிலை காரணமாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழகங்களிலும் 19ம் தேதி வரை வகுப்புக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர்சிங் சுக்கு கூறியதாவது: நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழையால் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் இது போன்ற பேரழிவு இதற்கு முன் ஏற்பட்டது இல்லை. பாதிப்புகளை சரி செய்ய ஓராண்டு ஆண்டு ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
The post தொடர் மழையால் நிலச்சரிவு இமாச்சலப்பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 57ஆக அதிகரிப்பு: பள்ளி, கல்லூரிகள் மூடல் appeared first on Dinakaran.
