×

சேலம்காரர் இருதலை கொள்ளி எறும்பாக தவிப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சேலம்காரர் மேலே வழக்கு இருந்தாலும், அதை தில்லாக சந்திக்க ஏன் பயப்படுகிறாராம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘சேலத்துக்காரரும், தேனிக்காரரும் ரெண்டா பிரிஞ்சி பல ஆண்டுகள் உருண்டோடி போச்சு. ரெண்டுபேரும் எலக்சன் கமிஷன்ல தாக்கல் செய்த அபிடவிட்ல தவறான தகவலை கொடுத்ததா, தேனி வாக்காளர் ஒருவர் கோர்ட்டுல வழக்கை போட்டார். இதுல தேனிக்காரரும், அவரது மகன் மீதான வழக்கில் எப்ஐஆர் பதிவு செய்தது தவறுன்னு சொல்லி கோர்ட் தள்ளுபடி செஞ்சிருச்சாம். ஆனா, எப்ஐஆர் பதிவு செஞ்சி வழக்கை விசாரிக்கனுமுன்னு மனுதாரர் கேட்கலையாம். நானே நேருக்கு நேர் பாத்துக்கிறேன்னு சொன்னதோடு மட்டுமல்லாமல், யார் புகார் கொடுத்தாங்களோ அவங்கதான் வழக்கை நிரூபிக்கணுமாம். ஆனா, எப்.ஐ.ஆர் ரத்து செய்யப்பட்டதோடு, புகார் கொடுத்தவரின் உரிமையை பற்றி எதுவும் சொல்லலையாம். இதனால தேனிக்காரர் மகிழ்ச்சி தற்காலிகமாக நீடிக்கிறதாம்.
ஆனா, இதேபோல ஒரு வழக்குதான் சேலம்காரர் மீதும் இருக்காம். அங்கும் போலீசார் எப்ஐஆர் போட்டிருக்காங்க. அதுக்காக தடை மட்டும் வாங்கியிருந்தாலும், தேனிக்காரருக்கு கிடைச்ச தீர்ப்பை வச்சி, சேலத்துக்காரரும் வழக்கை தள்ளுபடி செய்ய சொல்ல நீதிமன்றத்துக்கு போகலாமாம். ஆனா, அவர் கோர்ட்டுக்கு போக அச்சதோடு இருக்கிறாராம். கோர்ட், கேஸ், வாய்தா, வாதம் என்று முடியவே பல ஆண்டுகள் ஆயிடும்… அதற்குள் நாம போட்டியிட்டு ஜெயித்து வழக்கை காணாமல் இருக்க செய்துடலாம் என்ற நினைப்பில் இருக்கிறாராம். அப்படியே தேனிகாரர் தரப்புக்கு கொடுத்த தீர்ப்பை எடுத்துக்கிட்டு போனால், நம்ம செய்துள்ள கோல்மால் எல்லாம் வெளியே வர சான்ஸ் இருக்காம். கோர்ட்டுல நம்ம வண்டவாளம் எல்லாம் தண்டவாளத்துக்கு வந்துடும்னு பயப்படுறாராம். அதே நேரத்துல ரெண்டு பேர் மீதும் வழக்கு தொடர்ந்தவர், தனது உரிமைக்காக சட்ட நடவடிக்கைக்கு தயாராகி இருக்காராம். இதனை தெரிந்துகொண்ட இரு தலைவர்களும் ரொம்பவே அதிர்ச்சியில் இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தாமரை கட்சியின் பிரதர் மவுன்டனின் முகம் கோபத்துல சிவக்க என்ன காரணம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வடமாநில நதி பெயர் கொண்ட மாவட்டத்தில் மவுன்டன் யாத்திரையில் கோஷமே ரகளையாக மாறிப்போச்சாம்… மவுன்டன் பங்கேற்ற கூட்டத்தில் முகம் காட்டாத நபர் ஒருவர் ‘சேலத்துக்காரர்தான் அடுத்த பிரதமர்’ என ஓவராக கூவிட்டாராம். அந்த ஆளை தேடினால் கிடைக்கவில்லையாம். ஓவராக கத்திட்டு ஓடிவிட்டாராம். மேலும் அங்கே ஒட்டப்பட்ட போஸ்டர்களால் தாமரை கட்சியினருக்கும், இலைக்கட்சியினருக்கும் இடையே மோதலாம். ‘இதுபோல் எப்படி போஸ்டர் அடிக்கலாம்? இது எங்கள் தேசிய தலைமையை சங்கடப்படுத்துவதா… மற்ற கட்சிக்காரங்க என்ன நினைப்பாங்க… முதல்ல எத்தனை தொகுதி ஜெயிப்போம்னே சொல்ல முடியாது. தொகுதி பங்கீடே துவங்கவில்லை. அதற்குள் இப்படி போஸ்டர் ஒட்டலாமா’ என தாமரை கட்சியினர் கொக்கரித்தாங்களாம். அதற்கு இலைக்கட்சியினரோ, ‘உங்க கட்சி ஒன்றிய அமைச்சர்தானே, அடுத்த பிரதமராக தமிழர் ஒருவர் வரலாம் என கூறினார். அவர் கூறியதே எங்கள் சேலத்துக்காரரை நினைத்து தான்’ என ஒரே போடாக போட்டாங்களாம். இதைக் கேட்ட தாமரை கட்சியினர் ‘கப்சிப்’னு போயிட்டாங்களாம். இது ஒருபுறமிருக்க, சேலத்துக்காரர் தூங்கா நகரத்துக்குள் நுழையக் கூடாது என தென்மாவட்டங்கள் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இதனால் தாமரை கட்சியினர் மனசுக்குள் உற்சாக மழை பெய்து கொண்டே இருக்காம். ‘முதலில் உங்க தலைவர் தூங்கா நகரம் வர முடியுதான்னு பார்ப்போம். தமிழ்நாட்லயே உங்களுக்கு எதிர்ப்பு இருக்கு. இதுல பிரதமர் பதவி மேல ஆசையாம்…’ என பதிலடி கொடுத்து இருக்காங்க… தலைவர்கள் மத்தியில் இருந்த சண்டை, இப்போது நிர்வாகிகள் மட்டத்துக்கு உயர்ந்துள்ளதாம். இந்த சண்டை எங்கே போய் முடியும்னு தெரியல என்று சொன்னார் விக்கியானந்தா.
‘‘கிரிவலம் மாவட்டத்துல தலை கிறுகிறுன்னு சுற்றும் அளவுக்கு என்ன நடந்தது…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கிரிவலம் மாவட்டத்துல ஆறு அணி தாலுகா லிம்ட்ல கொஞ்ச நாளாக மணல் கடத்தல் தடுத்து நிறுத்தப்பட்டிருந்துச்சாம். இப்ப புதுசா 3 ஸ்டார் காக்கி வந்திருக்காராம். அவர் வந்த உடனே, மணல் மாபியா கும்பல், மீண்டும் கடத்தலை ஆரம்பிக்குறதுல தீவிரமா செயல்படுறாங்களாம். இதனால, ஏற்கனவே பழம் திண்ணு கொட்ட போட்ட 3 ஸ்டாரின் சாரதியோட வழிகாட்டுதல்படி, புது ஸ்டார் காக்கி தங்குற குடியிருப்புல தூய்மை செய்றோம்னு சொல்லி இருக்காங்க. தூய்மை பணிதானே செய்றாங்கன்னு பார்த்தா? ஏசி, வாசிங்மெஷின், பிரிட்ஜ் என்று புதுப்பொலிவாக்கிட்டாங்களாம். அதோட, ஸ்டேஷனையும் பலபலன்னு ஆக்கிட்டாங்களாம். சாரதியோட ஏற்பட்டுலத்தான் இந்த பலபலக்கும் மேட்டரெல்லாம் நடந்திருக்குதாம். சாரதிதான் எங்க யார்கிட்ட எவ்வளவு வாங்கணும்னு லிஸ்ட் போட்டு வெச்சி வசூல்வேட்டை நடத்துவாராம். ஸ்டார் காக்கியை கைக்குள்ள போட்டுகிட்டு, வேட்டை நடத்த தயாராகிட்டாங்களாம். ஸ்டார் காக்கிக்கு சாரதி மேட்டர் தெரியுமான்னு தான் தெரியலைன்னு காக்கிகள் வட்டாரத்துல பேசிக்கிறாங்க… புதியவருக்கு வாங்கி கொடுப்பது பத்து பர்சன்ட் தானாம். தொன்னூறு சதவீதத்தை பழைய காக்கி அதிகாரி சுருட்டிடறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சுதந்திர தினவிழாவில் பறிமாறிய சாப்பாடு பட்டியலை சொல்லி யார் வயித்தெறிச்சலை, யார் கொட்டிக்கிட்டாங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘சுதந்திர தின விழாவையொட்டி புதுவை கவர்னர் மாளிகையில் தேனீர் விருந்துக்கு அனைத்து கட்சிகளுக்கு பவர்புல் பெண்மணியான இசை அழைப்பு விடுத்தார். மக்கள் பிரச்னைகளில் போதிய கவனம் செலுத்தவில்லை என எதிர்கட்சிகள் தேனீர் விருந்தை புறக்கணித்தன. விருந்துக்கு வந்திருந்த முதல்வர், அமைச்சர்களுக்கு இசை தன் கையாலே உணவினை பரிமாறினர். எதிர்கட்சிகள் புறக்கணிப்பு குறித்து இசையிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, சிலர் கலந்து கொள்ளாதை பற்றி கவலையில்லை, யாருக்கும் நஷ்டம் கிடையாது. வந்திருந்தால் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்திருப்போம் என்று கூறினார். அதோடு நிறுத்திக்கொண்டிருந்தால் இசைக்கு நல்ல பெயராவது கிடைத்திருக்கும்… அதாவது, எதிர்கட்சியினர் நல்ல சாப்பாட்டை மிஸ் செய்துவிட்டனர். சுண்டைக்காய் சாம்பார், கோபி மஞ்சூரியன், ஐஸ்கிரீம் அனைத்தையும் மிஸ் செய்துட்டாங்க. நாங்கள் சந்தோஷமாக சாப்பிட்டோம். வரல.. வரலன்னு சொன்னவங்களுக்குதான் நஷ்டம் என குபீர் சிரிப்பு சிரித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளதாம்… அதற்கு எதிர்கட்சிகள் மாநிலத்தின் நலன் தான் முக்கியம்… அதை காலில் போட்டு மிதித்துவிட்டு அவர் விருந்தால் என்ன பயன் என்று சீறினார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post சேலம்காரர் இருதலை கொள்ளி எறும்பாக தவிப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Salemkarar ,Yananda ,Salemkar ,Peter ,Salem Karar ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...