×

நெல்லையப்பர் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

நெல்லை: நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பர் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கீரனூரில் அந்தணர் குலத்தில் சூரியன் அருளால் பிறந்தவர் கருவூர் சித்தர். அவர், கலைகள் முழுவதும் கற்றுத் தேர்ந்தவர். தம்மை அறிந்த தலைவனை தன்னுள் கண்ட பெருமை உடையவர். அவர் பல்வேறு சிவ ஸ்தலங்களுக்கு சென்று விட்டு ஈசனை தரிசித்து வரங்கள் பெற்று நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோயிலுக்கு சுவாமியை தரிசிக்க வந்தார். தான் அழைத்தவுடன் தனக்கு இறைவன் காட்சியளிக்க வேண்டும் என்ற வரத்தினை பெற்றிருந்தார் கருவூர் சித்தர்.

நெல்லையப்பர் கோயில் வாசல் முன் நின்று சுவாமி நெல்லையப்பரை ‘‘நெல்லையப்பா’’ என 3 முறை அவர் அழைத்தார். ஆனால் கருவூர் சித்தரின் கூப்பிட்ட குரலுக்கு நெல்லையப்பர் செவி சாய்க்கவில்லை. இதனால் கோபமுற்ற சித்தர், இங்கு இறைவன் இல்லை என்றும், எருக்கு எழட்டும் என சாபமிட்டு வடக்கு நோக்கி பயணித்தார். அப்போது மானூரில் அம்பலவாண முனிவரை சந்தித்து நடந்ததை கூறினார். அவரோ தாமதமாக வந்தாலும் தானாக வந்து தரிசனம் தருவான், நெல்லையப்பன் என்று கூறி சித்தரை ஆற்றுதல் படுத்தினார். இதேபோல் நெல்லையப்பர் மானூரில் கருவூர் சித்தருக்கு காட்சியளித்தார். இந்நிகழ்வே ஆவணி மூலத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

இவ்வாண்டுக்கான ஆவணி மூலத் திருவிழாவை முன்னிட்டு நெல்லையப்பர் கோயிலில் இன்று காலை 6.30 மணிக்கு மேல் காலை 7.30 மணிக்குள் சுவாமி சன்னதி உள்பிரகாரத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். விழாவில் வரும் 24ம் தேதி இரவு 7 மணிக்கு கருவூர் சித்தர் மானூருக்கு எழுந்தருளும் வைபவமும், தொடர்ந்து ரதவீதிகள், சங்கரன்கோவில் சாலை வழியாக மானூர் அம்பலவாணசுவாமி கோயிலை சென்றடைகிறார்.

ஆவணி மூல 10ம் திருநாளான ஆக.25ம் தேதி அதிகாலை 1 மணிக்கு நெல்லையப்பர் கோயிலில் இருந்து சந்திரசேகரர், பவானி அம்பாள், பாண்டியராஜா, சண்டிகேஸ்வரர், தாமிரபரணி தேவி, அகத்தியர், குங்கலிய நாயனார் ஆகியோர் பல்லக்கு மற்றும் சப்பரத்தில் மானூர் அம்பலவாணர் சுவாமி கோயிலுக்கு எழுந்தருளி 26ம் தேதி அதிகாலை 5 மணிக்கு மானூர் அம்பலவாணர் கோயிலை சென்றடைகின்றனர். அங்கு காலை 7 மணி முதல் 8 மணிக்குள் கருவூர் சித்தருக்கு சுவாமி காட்சியளித்து சாப விமோசனம் நிவர்த்தி செய்யும் வைபவம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமி- அம்பாளுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

The post நெல்லையப்பர் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Nail Source Festival ,Nelleyapar Temple ,Nellai ,Aawani Mallya ,Nelliyapar Temple ,Nelliyapar Town ,Andanar ,Keeranur ,Goosebar Temple ,
× RELATED நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர்,...