×

எல்கேஜி, யுகேஜி மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த 2,381 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு

 


வேலூர்: தமிழகத்தில் 2,381 அரசுப்பள்ளிகளில் படிக்கும் எல்கேஜி, யுகேஜி மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் அனுப்பிய கடிதத்தில் 2,381 அரசு பள்ளிகளில் முன்பு ஆரம்ப வகுப்புகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி பயிலும் மாணவர்களின் கல்வி தரத்தினை மேம்படுத்தும் வகையில் அந்த வகுப்புகளை கையாளும் சிறப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி இயக்ககத்தின் மூலம் கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வல்லுநர்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மாநில அளவில் மற்றும் மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இரு கட்டங்களாக இப்பயிற்சியை நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வல்லுநர்களை கொண்டு மாநில அளவில் கருத்தாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் 38 மாவட்டங்களை உள்ளடக்கிய 32 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பணி புரியும் ஒரு முதுகலை விரிவுரையாளர், விரிவுரையாளர் மற்றும் ஒரு எண்ணும் எழுத்தும் வகுப்புகளை சிறப்பாக செயல்படுத்தும் வட்டார வள மைய அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மாநில அளவில் இப்பயிற்சி நடைபெற உள்ளது.

இப்பயிற்சி சென்னையில் இரு பேட்ஜ் அடிப்படையில் நடக்கிறது. எனவே இப்பயிற்சியில் உரிய நாட்களில் பங்கு பெற ஏதுவாக சம்பந்தப்பட்ட கருத்தாளர்களை அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் மற்றும் அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுகிறது. தொடர்ந்து 2 கட்டமாக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்கத்திடமிருந்து மாவட்ட வாரியாக பெறப்பட்ட முன் ஆரம்பப் பள்ளிகளின் விவரங்களின்படி அனைத்து மாவட்டத்திலும் உள்ள முன் ஆரம்ப பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி பயிற்றுவிக்கும் சிறப்பு ஆசிரியர்களுக்கு மாநில அளவில் தற்போது பயிற்சி பெற்ற கருத்தாளர்களைக் கொண்டு மாவட்ட அளவில் அடுத்த மாதம் 7ம் தேதி முதல் 23ம் தேதி வரை ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேட்ஜ் வாரியாக பயிற்சி வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

The post எல்கேஜி, யுகேஜி மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த 2,381 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : LKG ,UKG ,Vellore ,Tamil Nadu ,
× RELATED 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார்...