×

சேலம் அருகே ஆட்டை அடித்து கொன்ற சிறுத்தை: விவசாயியை விரட்டியதால் மக்கள் பீதி

காடையாம்பட்டி: சேலம் அருகே, ஆட்டை அடித்து ெகான்ற சிறுத்தை, அதனை தடுக்க முயன்ற விவசாயியை விரட்டியதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே பூசாரிப்பட்டி ஊராட்சியில் வைரன்காடு கிராமத்தையொட்டி, தேங்கல்கரடு உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் விவசாயத்துடன் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். ஆடுகளை அங்குள்ள கரட்டில் மேய்ச்சலுக்கு விட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக எலத்தூர், குண்டுக்கல் உள்ளிட்ட வனப்பகுதி மற்றும் கரட்டு பகுதியில் ஒரு சிறுத்தை நடமாடியது. இதை பார்த்த கிராம மக்கள், அச்சமடைந்து வனத்துறையிடம் புகார் அளித்துள்ளனர். அவர்கள், பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் வைத்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒவ்வொரு பகுதியாக சுற்றிய சிறுத்தை, நேற்று வைரன்காடு பகுதியில் உள்ள கரட்டில் பதுங்கியது. அப்போது, கோவிந்தராஜ் என்பவரது 5 ஆடுகள் மேய்ச்சலுக்காக அந்த கரட்டு பகுதிக்கு சென்றன. அவற்றில் ஒரு பெரிய ஆட்டை சிறுத்தை அடித்து கொன்று, இழுத்து சென்றது. இதை கண்ட மற்ற 4 ஆடுகள் பாறை மீது ஏறி தப்பியது. அந்த பாறையின் அடியில், அடித்த ஆட்டை சாப்பிட்டு கொண்டு சிறுத்தை பதுங்கி உள்ளது. அதனால், பாறை மீது ஏறிய ஆடுகள், கீழே இறங்க முடியாமல் அங்கேயே தஞ்சமடைந்துள்ளன.

இதனிடையே, தனது ஆடுகளை மீட்க சென்ற கோவிந்தராஜையும் சிறுத்தை விரட்டியுள்ளது. பயத்தில் தப்பித்து ஓடியபோது, கீழே விழுந்ததில் கால்களில் காயம் ஏற்பட்டது. இதை கண்ட கிராம மக்கள் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து 2 வனத்துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். பின்னர், கரட்டு பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘உயரதிகாரிகள் உத்தரவு வந்த பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.

The post சேலம் அருகே ஆட்டை அடித்து கொன்ற சிறுத்தை: விவசாயியை விரட்டியதால் மக்கள் பீதி appeared first on Dinakaran.

Tags : Salem ,Kadaiyampatti ,Salem… ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...