×

என் ஆசையை என் மகன் நிறைவேற்றிவிட்டான்! :டிரிபிள் ஜம்ப் வீரரின் தந்தை பெருமிதம்

மதுரை மாவட்டம் கொடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வபிரபு. சமீபத்தில் கொலம்பியாவில் நடந்த 20 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் டிரிபிள் ஜம்ப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ‘முதல் இந்தியர்’என்ற பெருமையை தட்டிச் சென்றார். மேலும் ஆசிய தடகள கூட்டமைப்பு சார்பில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான தடகளப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்து ஆசியாவின் சிறந்த ஆண்கள் தடகள வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு பாங்காக்கில் நடைபெற்ற விழாவில் ஆசிய தடகள சங்கம் விருது வழங்கி கௌரவித்தது.

கிரீசில் நடந்த தடகளப் போட்டியில் ‘டிரிபிள் ஜம்ப்’எனும் மும்முறை நீளம் தாண்டுதலில் 16.79 மீட்டர் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்று புதிய சாதனை படைத்து 16 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்பீந்தர்சிங் என்ற தடகள வீரர், டிரிபிள் ஜம்ப்பில் 16.63 மீட்டர் நீளம் தாண்டியதே சாதனையாக இருந்த நிலையில், செல்வபிரபு அதனை முறியடித்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.மதுரையில் உள்ள செல்வபிரபுவின் தந்தை திருமாறனிடம் பேசியபோது, ‘‘விவசாயம்தான் எனக்குத் தொழில். என் மனைவி சுதா. எங்களுக்கு 2 மகன்கள். மூத்தவர் ராஜபிரபு. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிக்கிற அவருக்கும் ஃபுட்பால் விளையாடுவதில் ஆர்வம் அதிகம். இளைய மகன்தான் செல்வபிரபு. மதுரை ராமகிருஷ்ணாமடத்தில்தான் ஐந்தாவது வரை படித்தார். அப்போதே எந்த விளையாட்டையும் விடமாட்டார். ஆறு வயதிலேயே விளையாட்டில் சாதனை படைக்கும் ஆர்வம் அவருக்கு அதிகமாக இருந்தது. திருச்சி ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு, அங்கேயே 12ம் வகுப்பு வரை காஜாமைதீன் ஸ்கூலில்தான் படித்தார். இப்போது திருச்சி பிஷப் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் 2ம் ஆண்டுபடித்து வருகிறார். பிளஸ் ஒன் படிக்கும்போதே இந்த ‘டிரிபிள் ஜம்ப்’விளையாட்டில் அதிக ஆர்வம் காண்பிக்க ஆரம்பித்தார். மாவட்டம், மாநிலம், தேசிய, உலக அளவில் போட்டிகளில் பங்கேற்றார். இப்போது அந்த விளையாட்டில் சாதனை படைத்துள்ளது ஒரு தந்தையாக எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது’’ என்றார்.

தொடர்ந்து பேசிய திருமாறன்… ‘‘என்னால் 12ம் வகுப்புக்கு மேல் படிக்கவே முடியவில்லை. நான் பள்ளியில் படிக்கும்போது ஓட்டப்பந்தயத்து மேல் ஆர்வம் அதிகம். தடகளப் போட்டிகளில் பெருசா சாதிக்கணும்னு எனக்கு ஆசை இருந்தது. இன்றைக்கு என் மகன் தடகளப் போட்டியில் உலக சாதனைகள் படைத்து என்னுடைய ஆசையையும் சேர்த்து நிறைவேற்றித் தந்திருக்கார். ஆரம்பத்தில் செல்வபிரபுவுக்கு ஜெயந்தன்னு ஒரு கோச் இலவசமாக பயிற்சி கொடுத்தார். மதுரை டாக்டர் பாஸ்கர் போன்ற நிறைய பேர், உங்கள் மகன் சாதனை படைப்பார்.. ஒலிம்பிக் போட்டிக்கே போவார் என்று ஊக்கம் கொடுத்தார்கள். எல்லோருடைய நம்பிக்கையையும் செல்வபிரபு காப்பாத்தி இருக்கிறார். ஜேஎஸ் டபிள்யு கம்பெனி மாதிரி ஸ்பான்சர்களால் மகனால் மேலும் மேலும் சாதிக்க முடியும். தமிழக அரசும் ஊக்கம் தருகிறது. இந்த டிரிபிள் ஜம்ப் விளையாட்டுக்கு ரொம்பவே செலவழிக்கணும்.

உதாரணமாக ஸ்போர்ட்ஸ் ஷூ மட்டுமே 35 ஆயிரம் ரூபா ஆயிடும்.. டிரெயினிங் அது இதுன்னு 2 மாதத்தில் இது பிய்ந்துபோய்விடும். இருந்தாலும் மகனோட ஆர்வத்தால் விளையாட்டுச் செலவுக்காகவே என்னுடைய 5 ஏக்கர் நிலத்தை விற்றுவிட்டேன். ஆனால் செல்வபிரபு போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை அள்ளிவந்து தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தபோது கிடைக்கும் மகிழ்ச்சி, நிலத்தை இழந்தது போன்ற இழப்புகளையெல்லாம் மறக்கடிக்கச் செய்துவிடுகிறது. என் மகனை நேர்ல பார்த்து ஒரு வருடமாகிறது. ஆனாலும், இரண்டொரு நாளைக்கு ஒரு முறையாவது போனில் பேச மகன் மறந்ததில்லை. இப்போது ஸ்பெயினில் பயிற்சியில் இருக்கேன்னு சொன்னார். மதுரையில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்து, இன்றைக்கு உலகமே என் மகனை பெருமையாக பேசுவது எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சியைத் தருகிறது. இதைவிட பெரிய சந்தோஷம் வேறு என்னங்க இருக்கு’’ என்று மனம் மகிழ்ந்து பேசி முடித்தார் சாதனை வீரர் செல்வபிரபுவின் தந்தை திருமாறன்.
– அபுதாகிர்

நம்பிக்கை நட்சத்திரமாக மேலெழுந்து வரும் செல்வபிரபு..
தமிழக முதல்வர் பாராட்டு!

செல்வபிரபுவின் ஆசிய சாதனையை பாராட்டியுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில், “மென்மேலும் புதிய சாதனைகளைப் படைத்து தடகளப் பிரிவில் தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக மேலெழுந்து வரும் செல்வபிரபு திருமாறனுக்கு பாராட்டுகள்”என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், “ஆசியாவின் சிறந்த ஜூனியர் (யு20) தடகள வீரராக நம் தமிழ்நாட்டின் டிரிபிள் ஜம்ப் வீரர் செல்வபிரபு தேர்வு செய்யப்பட்டுள்ளது அறிந்து மகிழ்ந்தேன். ஆசியன் அத்லெட்டிக் அசோசியேஷனின் இந்த மதிப்பிற்குரிய விருதினைப் பெற்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ள தம்பி செல்வபிரபுவுக்கு வாழ்த்துகள். அவரது திறமைக்கு உலக அரங்கில் இன்னும் பல அங்கீகாரங்கள் கிடைப்பதற்கு கழக அரசு என்றும் துணைநிற்கும்”எனத் தெரிவித்துள்ளார். இவர்களைப் போல தமிழகத்து தலைவர்கள் பலரும் செல்வபிரபுவின் சாதனையைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

The post என் ஆசையை என் மகன் நிறைவேற்றிவிட்டான்! :டிரிபிள் ஜம்ப் வீரரின் தந்தை பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Triple ,Jumper ,Selva Prabhu ,Kodimangalam ,Madurai district ,U-20 World Athletics Championships ,Colombia… ,Purumitha ,Dinakaran ,
× RELATED சூப்பர் பவராக இந்தியா மாறும் அதற்காக...