×

தமிழகத்தில் விவசாய நிலங்கள், மலைகளை அழிக்கும் ஒன்றிய அரசு: நியூட்ரினோ போன்று அடுத்த ஆபத்து

* மேற்கு தொடர்ச்சி மலையை துளைக்கும்
* புவியியல் ஆய்வு மையத்தால் விவசாயிகள் கலக்கம்

கம்பம்: தமிழகத்தில் நியூட்ரினோ போன்று அடுத்த திட்டத்துக்காக மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் ஒன்றிய அரசின் புவியியல் ஆய்வு மையம் நடத்தி வரும் உலோகங்கள் கண்டுபிடிக்கும் ஆய்வால் விவசாயிகள் கலக்கம் அடைந்து உள்ளனர். ஒன்றிய அரசின் புவியியல் ஆய்வு மையம் சார்பில் தேனி மாவட்டம், கம்பம் மேற்குமலை அடிவாரப்பகுதியில் அதிர்வில்லாத ஆழ்துளை இயந்திரம் முலம் தோண்டப்பட்டு மண், கற்கள், பாறை (கோர்) சாம்பிள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஆழ்துளை கிணறு 20 அடி முதல் 30, 40, 50 அடி என 200 அடி வரை தோண்டி கோர் சாம்பிள் சேகரிக்கப்பட்டு, தனித்தனி பெட்டிகளில் அடைக்கப்பட்டு, அதை ஆய்வு செய்ய ஐதராபாத்திலுள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த கோர் சாம்பிள் எடுக்கும் ஆய்வுப்பணிகளில், கொல்கத்தா, ஒடிசா, கேரளம், தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் பணி செய்கின்றனர்.

ஒன்றிய அரசின் புவியியல் ஆய்வு மையம் தொடங்கி உள்ள இந்த ஆய்வு தேனி மாவட்டத்திற்கு நியூட்ரினோ போல் மற்றுமொரு ஆபத்து என்றும், பசுமை மிகுந்த கம்பம் பள்ளத்தாக்கை சீர்குலைக்கும் முயற்சியாகும் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், ‘‘கம்பம் பள்ளத்தாக்கை ஒட்டிய பரப்பை ஏற்கனவே சீர்குலைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் பொட்டிபுரம் நியூட்ரினோ ஆய்வகம். அதனுடைய தொடர்ச்சியாக இந்திய புவியியல் ஆய்வு மையம் அடுத்த வேலையில் இறங்கி இருக்கிறது. கார்பனேட் மற்றும் அதனுடன் தொடர்புடைய அரிய உலோகங்களை கண்டுபிடிப்பதற்கான ஆய்வுப் பணியை, ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரை காலக்கெடு விதித்து செய்து கொண்டிருக்கிறது.

இந்திய புவியியல் ஆய்வு மைய மண்ணியல் ஆய்வாளர்கள் 2.2 சதுர கிலோமீட்டர் பரப்பை அளவீடாகக் கொண்டு, 15 செங்குத்து ஆழ்துளை கிணறுகள் மூலம் 900 மீட்டர் ஆழத்தில் துளையிடும் பணியில் இறங்கியதோடு, நான்கு ஆழ்துளை கிணறுகளை அமைத்தும் முடித்து விட்டனர். பேட்டரி கார்களுக்கு தேவையான லித்தியம் என்கிற விலை உயர்ந்த கனிமத்தை தேடி இந்த பயணம் இருக்கிறதா என்பதை இந்திய புவியியல் ஆய்வு மையம் விளக்க வேண்டும். வன வளமும், நில வளமும் மிகுந்த கம்பம்மெட்டை இந்திய புவியியல் ஆய்வு மையம் குறி வைக்க காரணம் என்ன என்பதை மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தாதவாறு தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும்,’’ என்றார். ஆய்வுபணி குறித்து ஒன்றிய அரசின் புவியியல் ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது.

தற்போது கம்பம்மெட்டு அடிவாரப்பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் கனிமவளங்கள் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூமிக்கடியில் எஃகு, நிலக்கரி, உலோகம் போன்றவை குறித்த தகவல்களை கண்டுபிடிக்க இந்த டிரில்லிங் முறை பயன்படுத்தப்படுகிறது. கோர் சாம்பிள் எடுத்து அனுப்புவது எங்கள் குழுவின் பணி. தமிழகத்தில் ஏற்கனவே சேலம், கிருஷ்ணகிரி பகுதியில் இதுபோல் கோர் சாம்பிள் எடுக்கப்பட்டு, ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கம்பத்தில் தற்போது 200 அடி வரை மட்டுமே (சுமார் 60 மீட்டர்) தோண்டப்பட்டு சாம்பிள் எடுக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஆய்வு முடிவுகளில் மட்டுமே இப்பகுதியில் பெருங்கனிமங்கள் அல்லது சிறு கனிமங்கள் உள்ளது தெரியவரும்’’ என்றார்.

உலகத்துக்கே சோறு போடும் டெல்டா பகுதியை அழித்து ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை எண்ணெய் நிறுவனங்களுக்காக ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. இதுதவிர, கடலுக்கு அடியிலும் எண்ணெய் திட்டங்களை செயல்படுத்த உள்ளது. ஒன்றிய அரசின் என்எல்சி நிறுவனத்தின் விரிவாக்கத்துக்காக விவசாய நிலங்கள் அழிக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. இந்த சூழலில், தற்போது மேற்கு தொடர்ச்சி மலையை அழிக்கும் நோக்கில் நியூட்ரினோ போன்று அடுத்த திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருவது விவசாயிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post தமிழகத்தில் விவசாய நிலங்கள், மலைகளை அழிக்கும் ஒன்றிய அரசு: நியூட்ரினோ போன்று அடுத்த ஆபத்து appeared first on Dinakaran.

Tags : Union Govt ,Tamil Nadu ,Union government ,
× RELATED மோசடி குறுஞ்செய்திகளை அனுப்பிய...