×

வைகை எக்ஸ்பிரஸுக்கு ‘வயது 46’: கேக் வெட்டி பயணிகள் கொண்டாட்டம்

மதுரை: வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவை தொடங்கி 46 ஆண்டுகள் முடிந்ததை கொண்டாடும் வகையில் பயணிகள் நேற்று கேக் வெட்டி மகிழ்ந்தனர். கடந்த 15.08.1977ல் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரயில் சென்னை- மதுரை இடையே பகல் நேர விரைவு ரயிலாக இயக்கப்படுவதன் மூலம் தென்மாவட்ட மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டிலேயே மீட்டர் கேஜ் பாதையில் மணிக்கு 105 கிமீ வேகத்தில் சென்று நாட்டின் அதி விரைவு ரயில் என்ற பெருமையைப் பெற்றது. ஆசியாவிலேயே மீட்டர் கேஜில் அதிவேகமாக இயக்கப்பட்ட ரயில் என்ற சாதனை பெருமையும் வைகை எக்ஸ்பிரஸ்க்கு உண்டு.

மேலும் நாட்டிலேயே முதன் முறையாக மீட்டர் கேஜில் குளிர்சாதன வசதி வைகையில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தகைய பெருமை கொண்ட வைகை எக்ஸ்பிரஸ் தினந்தோறும் மதுரையில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.35 மணிக்கு சென்னையை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், சென்னையில் இருந்து பிற்பகல் 1.40 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணியளவில் மதுரையை வந்தடைகிறது. இந்த ரயிலில் தினமும் 5 ஆயிரம் பேர் வரை பயணிக்கின்றனர். இந்த 46 ஆண்டுகளில் சுமார் ஒரு கோடியே 77 லட்சத்து 30 ஆயிரம் கி.மீ. தூரம் பயணித்துள்ளது.

வைகை எக்ஸ்பிரஸ் அறிமுகமாகி 46 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும்விதமாக பயணிகள் 3வது நடைமேடையில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் அருகில் நின்று நேற்று கேக் வெட்டி மகிழ்ந்தனர். வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் லோகோ பைலட்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்னாள் லோகோ பைலட் கூறும்போது, ‘‘தற்போது பல நவீன வசதிகளுடன் வைகை எக்ஸ்பிரஸ் மதுரை- சென்னை இடையே இயங்குகிறது. அதே நேரம் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. வைகையுடனான பணியானது வாழ்வில் எப்போதும் மறக்க முடியாத பெருமைமிக்க தருணமாகும்’’ என்றார்.

The post வைகை எக்ஸ்பிரஸுக்கு ‘வயது 46’: கேக் வெட்டி பயணிகள் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை