×

நித்தியானந்தா குழுவினரிடம் இருந்து ரூ30 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு: வருவாய்த்துறை நடவடிக்கை

சென்னை: பல்லாவரம் அருகே நித்தியானந்தா குழுவினரிடமிருந்து, அரசுக்கு சொந்தமான ரூ30 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை வருவாய் துறையினர் மீட்டனர். பல்லாவரம் அடுத்த திரிசூலம், பச்சையம்மன் கோயில் தெருவில் அரசுக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு மலை புறம்போக்கு நிலம் உள்ளது. சுமார் ரூ30 கோடி மதிப்பிலான இந்த நிலத்தை கைலாச புகழ் நித்தியானந்தா குழுமத்தினர், ஏழு ஆண்டுகளாக ஆக்கிரமித்து கோசாலை அமைத்து, சாமி சிலைகளை வைத்து வழிபாடு செய்து, ஆண்டு அனுபவித்து வந்தனர். அதேபோன்று சிலரும் இந்த நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இதனால், அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, கோசாலை அமைத்து சாமி சிலைகளை வைத்து வழிபாடு செய்துவரும் நித்தியானந்தா தரப்பினரும், வீடுகள் கட்டி குடியிருந்து வருபவர்களும் நிலம் ெதாடபாக மோதி கொண்டனர்.

இதுதொடர்பாக பலமுறை இரு தரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு, இரு தரப்பினரும் மாறிமாறி பல்லாவரம் காவல் நிலையம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வந்தனர். இந்நிலையில், பல கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை சொந்தம் கொண்டாடி, இரு தரப்பினரும் அடிக்கடி மோதிக்கொண்டதை அறிந்த செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், உடனடியாக தனியார் ஆக்கிரமித்து வைத்திருக்கும் அரசு நிலத்தை மீட்க, வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுதொடர்பாக ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டு இருந்தது.

இருந்த போதிலும் அவர்கள் ஆக்கிரமிப்பு நிலத்தை கைவிட மறுத்ததால், பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் நேற்று வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில், அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவர் முழுவதும் பொக்லைன் இயந்திரம் கொண்டு இடித்து தரை மட்டமாக்கி, தனியார் வசம் இருந்த அரசு நிலத்தை மீட்டனர். வருவாய் துறையினரின் இந்த திடீர் நடவடிக்கையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பதற்றத்தை தணிக்க பல்லாவரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகள் கூறுகையில், ‘நித்தியானந்தா குழுவினருக்கு இந்த மலை புறம்போக்கு நிலம் அருகே 76 செண்டு பரப்பளவு கொண்ட பட்டா நிலம் உள்ளது. அதன் அருகிலேயே உள்ள ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த அரசு மலை புறம்போக்கு நிலத்தையும் சேர்த்து, அவர்கள் சுற்றுச்சுவர் அமைத்து அனுபவித்து வந்தனர். அரசுக்கு சொந்தமான நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் மட்டும் அகற்றப்பட்டு, தனியார் வசம் இருந்த அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது. கையகப்படுத்தப்பட்ட அரசுக்கு சொந்தமான மலை புறம்போக்கு நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ30 கோடி இருக்கும்’ என்றனர்.

The post நித்தியானந்தா குழுவினரிடம் இருந்து ரூ30 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு: வருவாய்த்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Nitiyananda Group ,Chennai ,Revenue Department ,Pallavaram ,Dinakaran ,
× RELATED சென்னையில் சட்டக்கல்லூரி அமைக்க இடம்...