×

பல ஆண்டுகளாக பட்டா, சிட்டா அடங்கல் தர மறுப்பு: கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்த உடும்பியம் கிராம மக்கள்

பெரம்பலூர்,ஆக.15: பல வருடங்களாக பட்டா, சிட்டா, அடங்கல் தர மறுப்பதால் எங்கள் ஆதார், ரேசன் கார்டுகளை, வாக்காளர் அடையாள அட்டைகளை கலெக்டர் அலுவலகத்தில் உடும்பியம் கிராம பொதுமக்கள் ஒப்படைக்க வந்தனர்.நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி கூறியதையடுத்து அடையாள அட்டைகளை திரும்ப பெற்று சென்றனர். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று(14ம்தேதி) பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை வகித்தார். கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, உடும்பியம் ஊராட்சி, கிழக்கு காட்டுக் கொட்டகை பகுதியை சேர்ந்த சின்ன முத்து மகன் ராஜேஸ்வரன் தலைமையில் பொது மக்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அளித்த புகார் மனுவில் தெரிவித்து இருப்பதாவது :நாங்கள் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, உடும்பியம் கிராமத்தில் கடந்த 1970 ம் ஆண்டு முதல் நிலம் கிரயம் பெற்று முறைப்படி பட்டா மற்றும் சிட்டா அனைத்தும் பெற்று விவசாயம் செய்து வசித்து வருகிறோம்.

கடந்த 2012ம் ஆண்டு முதல் எங்களுக்கு கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப்படும், பட்டா, சிட்டா, அடங்கல், சொத்து வரி மற்றும் அரசின் அனைத்து சலுகைகளும், பத்திரப்பதிவுகளும், அரசின் எவ்வித ஆணையும் இன்றி நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட கலெக்டருக்கு கடந்த ஜூலை 14ம்தேதி பாதிக்கப்பட்ட கிராம மக்கள் சார்பாக மனு அளித்துள்ளோம். அந்த மனு தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர் என மாறி மாறி, சென்னை ஆவணக் காப்பகம் வரை சென்று திரும்பியுள்ளது. இருந்தும் எவ்வித பயனும் இல்லை.இதனால் அன்றிலிருந்து இன்று வரை 9 மாதம் ஆகியும் எங்களுக்கான எந்தவித பதிலும் மற்றும் அரசு வழங்கும் சலுகைகளும், உரிமைகளும் கிடைக்கப் பெறவில்லை.

நாங்கள் மனு அளித்து இன்றோடு 3 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதனால் பாதிக் கப்பட்ட விவசாயிகள் அனைவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளோம்.எனவே எங்கள் நிலத்திற்கு அரசு வழங்கக் கூடிய ஆவணங்கள் மற்றும் சலுகைகளும் நிறுத்தி வைக்கப்பட்ட காரணத்தால், அரசு எங்களுக்கு முறையாக வழங்கியுள்ள ஆவணங்களான ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அனைத்தையும் இன்று முறையாக தங்களிடம் ஒப்படைக்க முடிவெடுத்து உள்ளோம் .மாவட்ட கலெக்டர், எங்களது ஆவணங்களை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என அந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தனர்.மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகக்கூறி உறுதி அளித்ததால் அனைவரும் ஒப்படைக்கக் கொண்டு வந்த ஆவணங்களை திரும்பக் கொண்டு சென்றனர்.

The post பல ஆண்டுகளாக பட்டா, சிட்டா அடங்கல் தர மறுப்பு: கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்த உடும்பியம் கிராம மக்கள் appeared first on Dinakaran.

Tags : Patta ,Chitta ,Udumbayam ,Perambalur ,Indang ,Chitta Indang ,Dinakaran ,
× RELATED பட்டா வழங்க ரூ.8,000 லஞ்சம் வாங்கிய துணை...