×

தொடர் மழையால் சுற்றுலா தலமான லாடபுரம் மயிலூற்று அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்

பெரம்பலூர்,ஆக.15: தொடர்மழையால் பெரம்பலூர் மாவட்ட சுற்றுலாத் தலமான லாடபுரம் மயிலூற்று அருவியில் மழைநீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதையடுத்து இளைஞர்கள் குளிப்பதற்கு அதிகளவில் செல்கின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களில் லாடபுரம் மயிலூற்று அருவியும் ஒன்றாகும். பெரம்பலூர் மாவட்டம், லாடபுரத்தின் அருகேயுள்ள பச்சை மலையில், பாறை மீதிருந்து அருவியாகக் கொட்டுகிற மழைநீர், பாறை மீது அமர்ந்துள்ள மயில் தனது தோகையை விரித்துத் தொங்க விட்டது போல் காணப் பட்டதால் இந்தஅருவிக்கு மயிலூற்று அருவி எனப் பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையாகவுள்ள பச்சைமலைத் தொடர்ச்சியில் மலையாளப்பட்டி அருகே எட்டெருமைப்பாழி அருவி, தொண்டமாந்துறை அருகே கோரையாறு அருவி, பூலாம்பாடி அருகே இரட்டைப் புறா அருவி போன்றவை மலைமீது மயில்கணக்கில் ஏறிச் சென்றால்தான் ஆர்ப்பரிக்கும் அருவியை அடையமுடியும். ஆனால் லாடபுரம் அருவிக்கு லாடபுரத்தில் இருந்து, சரவணபுரம் வழியாக பைக்கிலோ, காரிலோ 3கிமீ தூரம் சென்றபிறகு 10நிமிடத்தில் பால்போல் கொட்டும் அருவிக்குச் சென்று விடலாம் என்பதாலேயே எளிதில் சுற்றுலா அந்தஸ்து பெற்றுத் திகழ்கிறது.

இந்த நிலையில் கடந்த 9ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் 468-மிமீ அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் சராசரி அளவு 42.55மிமீ ஆகும். இதில் தழுதாழை 58மிமீ, வேப்பந்தட்டை 83 மிமீ என மாவட்டத்தின் வட மேற்குப் பகுதியில் வாரிக் கொட்டியது மழை. அது போல் அடுத்தடுத்த நாட்கள் பரவலாக மழைபெய்தது. 12ம்தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் 316 மிமீ மழை பெய்தது. இதன் சராசரி அளவு 28.73 மிமீ ஆகும். தொடர்ச்சியாக 9ம் தேதிமுதல் 13ம் தேதிவரை பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. குறிப் பாக இந்த மழை மாவட்டத்தின் மேற்கு எல்லையான பச்சைமலை மீது கொட்டித் தீர்த்ததால் கல்லாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து,

மாவட்டத்தின் சுற்றுலாத் தலமான விசுவக்குடி அணைக்கட்டிற்கு தண்ணீர் வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் 16அடியாக உயர்ந்துள்ளது. அதே போல பச்சை மலைமேல் பெய்த மழையின் காரணமாக மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தலமான லாடபுரம் மயிலூற்று அருவியில் 4 நாட்களாக பரவலாகப் பெய்து வந்த மழையால் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. 11ம் தேதிமுதல் செம்மண் நிறத்துடன் கொட்டிய மழைநீர் 13ம்தேதி கன மழைக்குப்பிறகு தெளிந்த நீராக பாறையின் வழியாக பன்னீரைத் தூவுவதுபோல் அருவிநீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் குளிக்க படையெடுத்து செல்கின்றனர்.

The post தொடர் மழையால் சுற்றுலா தலமான லாடபுரம் மயிலூற்று அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர் appeared first on Dinakaran.

Tags : Ladhapuram Mayiloottu ,Perambalur ,Ladhapuram Mayiloortu ,Perambalur district ,Ladhapuram Mayiloothu ,
× RELATED குழந்தை திருமணம் செய்து வைத்தால்...