×

ஆந்திராவில் இருந்து சென்னை வந்த 2 எக்ஸ்பிரஸ் ரயில்களில் திருடர்கள் கைவரிசை

சென்னை: ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த 2 எக்ஸ்பிரஸ் ரயிலில் திருடர்கள் கத்தி முனையில் கைவரிசை காட்டியுள்ளனர். ஆந்திர மாநிலம் சிங்கராயகொண்டா மற்றும் டெட் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்தது. சரியாக நள்ளிரவு 1.20 மணி என்பதால் பயணிகள் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். ரயிலுக்கு சிக்னல் கிடைக்காததால் டிரைவர் ரயிலை நடுவழியில் நிறுத்தியுள்ளார். அந்த சமயம் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கையில் கத்தியுடன் ரயிலின் எஸ்.2, எஸ்.4, எஸ்.7 மற்றும் எஸ்.8 ஆகிய பெட்டிகளில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகளிடம் இருந்து கத்தி முனையில் நகைகளை பறித்துக்கொண்டு கொள்ளை கும்பல் தப்பியோடியது. சில பயணிகளிடம் விலை உயர்ந்த நகைகள் மற்றும் போன்களை பறித்ததால் அவர்கள் திருடர்களிடம் கெஞ்சியுள்ளனர்.

பின்னர், அந்த கும்பல் சிறிது நேரத்தில் அந்த வழியாக செகந்திராபாத்தில் இருந்து சென்னை தாம்பரம் நோக்கி வந்த சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி எஸ்-1 மற்றும் எஸ்-2 பெட்டிகளில் தூங்கி கொண்டிருந்த பயணிகளை தட்டி எழுப்பி கத்தி முனையில் நகை பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் இது பற்றி அறிந்ததும் ரயில்வே போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் மர்ம கும்பல் ரயிலில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடியுள்ளனர். போலீசார் அவர்களை சிறிது தூரம் விரட்டி சென்றனர்.

அப்போது கொள்ளையர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்கி விட்டு தப்பி விட்டனர். அடுத்தடுத்து நடந்த இந்த 2 சம்பவங்களும் நள்ளிரவு 1.20 மணியில் இருந்து 1.50 மணிக்குள் நடந்ததாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர். மேலும், மர்ம கும்பல் சிக்னலை உடைத்து இந்த இந்த செயலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. பின்னர் 2 ரயில்களும் கவாலி ரயில் நிலையத்தில் நின்றதும், பயணிகள் ரயில்வே போலீசில் புகார் கொடுத்தனர். மொத்தம் 30 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் பறித்து சென்றதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

The post ஆந்திராவில் இருந்து சென்னை வந்த 2 எக்ஸ்பிரஸ் ரயில்களில் திருடர்கள் கைவரிசை appeared first on Dinakaran.

Tags : Thieves ,Andhra ,Chennai ,Andhra… ,
× RELATED கொளுத்தும் வெயிலுக்கு மரம்...