×

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கன்னியாகுமரி புலிக்கு சிகிச்சை

சென்னை: கன்னியாகுமரியில் பிடிபட்ட ஆண் புலிக்கு வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதை சிசிடிவி கேமரா மூலம் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு சிற்றாறு சிலோன் காலனியில் புலி ஒன்று ஆடுகள் மற்றும் நாய்களை வேட்டையாடி பொதுமக்களை அச்சுறுத்தியது. இதையடுத்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு அந்த புலியை பேச்சுப்பாறை கல்லறை வயல் பகுதியில் வனத்துறை அதிகாரிகள் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இதில், 13 வயதான அந்த ஆண் புலி மிகவும் பலவீனமாக காணப்பட்டது. அது, வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கடந்த 10ம் தேதி கொண்டு வரப்பட்டது.

இதில் சோர்வாக காணப்பட்ட புலிக்கு பூங்காவில் உள்ள கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து சிசிடிவி கேமரா மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், தற்போது அந்த புலி நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து பூங்கா அதிகாரிகள் கூறுகையில், ‘கன்னியாகுமரியில் இருந்து கொண்டுவரப்பட்ட புலிக்கு மருத்துவர் குழுவினர்கள் சிகிச்சை அளித்து முழு கண்காணிப்பில் பாதுகாத்து வருகின்றனர். அதற்கான உணவு வழங்கப்பட்டு வருகிறது. விரைவில், அந்த ஆண் புலி பூரண குணமடைந்து விடும். பூங்கா பணியாளர்கள் பயிற்சி கொடுப்பார்கள். பின்னர் அது பார்வையாளர்கள் கண்டுகளிப்பதற்காக விடப்படும்’ என்றனர்.

The post வண்டலூர் உயிரியல் பூங்காவில் கன்னியாகுமரி புலிக்கு சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Vandalur Zoo ,Chennai ,Kannyakumary ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஊழியரை கடித்து குதறிய முதலை