×

நடவடிக்கை தேவை

டெல்லியில் இருந்து அரியானா மாநிலம் குருகிராமுக்கு செல்லும் 29 கி.மீ துவாரகா விரைவு சாலை திட்டத்தில் ரூ.6,758 கோடி முறைகேடு நடந்திருப்பது மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை மூலம் அம்பலமாகியுள்ளது. கிலோ மீட்டருக்கு ரூ.18.20 கோடி செலவிட ஒன்றிய அமைச்சரவை அனுமதி அளித்தது. ஆனால், நெடுஞ்சாலை துறை தன்னிச்சையாக எவ்வித திட்ட அறிக்கையும் இல்லாமல் கி.மீக்கு ரூ.250.77 கோடி செலவிட்டுள்ளது. நெடுஞ்சாலை மற்றும் பிற துறைகளை தன்னிச்சையாக செயல்பட வைக்க மறைமுக அழுத்தம் கொடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒன்றிய அரசு வழக்கம்போல் மவுனம் காக்காமல் உண்மையில் நடந்தது என்ன என்பதை தெரியப்படுத்த வேண்டியது மிக அவசியம். பாரத மாலா பரியோஜனா 1 திட்டத்தின் கீழ், இதுவரை 34,800 கி.மீ நீளத்துக்கு புதிய தேசிய நெடுஞ்சாலைகள், விரைவு சாலைகளை ஒன்றிய அரசு அமைத்து வருகிறது. இதன் மொத்த திட்ட செலவு ரூ.5.35 லட்சம் கோடியாகும். இதில், டெல்லி- குருகிராமுக்கு செல்லும் துவாரகா விரைவு சாலை திட்டத்தில் ரூ.6,758 கோடி முறைகேடு நடந்துள்ளது. மற்ற பகுதிகளில் நடந்து வரும் பணிகளிலும் முறைகேடு நடந்துள்ளதா, நடக்கிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்கு தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவு சாலைகள் தேவையாக உள்ளது. இதன் மூலம் ஒரு மாநிலத்தில் இருந்து வாகனம் மூலம் பல்வேறு பொருட்களை எளிதாக மற்ற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல முடியும். மேலும், புதிய சாலைகளால் மக்களின் பயண நேரமும் வெகுவாக குறையும். எனவே புதிய சாலைகள் தரமாக இருக்க வேண்டியது அவசியம் என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக, தேசிய நெடுஞ்சாலைகளில் போர் விமானங்கள் தரையிறக்கம் சோதனை வெற்றி பெற்றுள்ளது.

போர் காலங்களில் நாட்டின் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் போர் விமானங்களை தரையிறக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம் என்பதை கருத்தில் கொண்டு இதுபோன்ற சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக, டெல்லி- குருகிராம் துவாரகா விரைவு சாலை திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை அனுமதி அளித்த தொகையை விட பல மடங்கு கூடுதலாக செலவிட வேண்டிய அவசியம் என்ன?.

இந்த திட்டத்திற்கு அதிகளவு நிதி தேவைப்படுகிறது என்றால், அதை ஒன்றிய அரசிடம் முறையாக கேட்டு பெற்றிருக்கலாம். தேசிய நெடுஞ்சாலைத் துறை தன்னிச்சையாக செயல்பட்டதில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. இவற்றிற்கு ஆக்கப்பூர்வமான பதிலை தர வேண்டிய கடமை அத்துறைக்கு உள்ளது. செலவு தொகையை மிச்சப்படுத்த பல்வேறு வழிகள் இருந்தும், அவற்றை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பின்பற்றாமல் கூடுதலாக செலவு செய்துள்ளது.

டெல்லி- குருகிராமுக்கு செல்லும் துவாரகா விரைவு சாலை திட்டத்தில் நடந்துள்ள முறைகேடு விஷயத்தில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளது தெளிவாக தெரியவந்துள்ளது. நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு நிறைவேற்றப்படும் திட்டங்களில் முடிந்தளவுக்கு செலவு தொகையை மிச்சப்படுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வழிவகை செய்ய வேண்டும். ஆனால், பல்வேறு வழிமுறைகள் இருந்தும், விரைவு சாலை திட்டத்தில் ரூ.6,758 கோடி முறைகேடு நடந்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post நடவடிக்கை தேவை appeared first on Dinakaran.

Tags : Ariana ,Delhi ,Gurugram ,Mi Dharaka ,Dinakaran ,
× RELATED அரியானாவில் ஆயுதங்கள், மதுபானங்கள் பறிமுதல்