×

இலை கட்சி மாநாட்டுக்காக ஒரு ஒன்றியத்துக்கு 5 லகரம் வழங்கும் சேலம்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘இ லை கட்சி மாநாட்டில் தினமும் ஒரு தகவல் வெளியாகுதே.. இப்போது என்ன விசேஷம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘கடற்கரையோர மாவட்டம் உள்ளிட்ட தென்மாவட்டத்தில் 10.5% உள்இடஒதுக்கீடு விவகாரத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர், இலைக்கட்சியின் பொதுச் செயலாளரான சேலத்துக்காரர் மீது கடும் கோபத்தில் இருக்காங்க. இந்நிலையில்தான், தென்மாவட்டத் தலைநகரான தூங்காநகரில் வரும் 20ம் தேதி இலைக்கட்சி சார்பில் மாநாடு நடக்குதாம். எனவே, அச்சமுதாயத்தின் மாஜிக்களை வைத்து சேலம்காரர் மாநாடு ஏற்பாடுகளை வேகப்படுத்தி இருக்கிறாராம்.

இதனை அறிந்த இலை கட்சி இல்லாமல், சமுதாய சங்க நிர்வாகிகளில் ஒரு தரப்பினர் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தும், மாநாடு நடக்கிற அதேநாளில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருக்காங்களாம். இதனால் சேலத்துக்காரர் கவலையில் உள்ளாராம். மறுபுறம் மாநாட்டில் கூட்டத்தை அதிகமாக காட்ட, ஊர், ஊராக சென்று கட்டிங், பிரியாணி தருவதாகச் சொல்லி ஆள் பிடிக்கும் வேலையில் இலைக்கட்சி மாஜிக்கள் இரவும், பகலுமாய் அலைந்து திரிந்து வர்றாங்க. இதற்காக ஒவ்வொரு ஒன்றிய நிர்வாகிக்கும் ரூ5 லட்சம் ரகசியமாக பறந்து போயிருக்காம்.

மாநாடு நல்லபடியாக நடக்கும்வரை இலைக்கட்சியின் மாஜிக்கள் கண்டிப்பாக தூங்க மாட்டாங்க… காரணம் அடுத்த வருஷம் நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால் மாநில நிர்வாகிகள் இலை கட்சியில் பதற்றமாக இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ தாமரையில் ஆக்டிவ்வாக இருக்கும் நபர்களை தூக்க யார் திட்டம் ேபாட்டு இருக்காங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைகட்சியின் மதுரை மாநாட்டுல, மாற்றுக்கட்சிக்காரங்கள அதிகளவில் கொண்டு வந்து, கட்சியில் சேர்த்து அசரடிக்கணும் என்று சேலத்துக்காரரு சொல்லி இருக்காராம். கட்சியில் இருந்து விலக்கப்பட்ட யார் வேண்டுமானாலும், மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் கட்சியில் சேரலாம் என்ற அவரது அறிவிப்புக்கு சரியான ரெஸ்பான்ஸ் இல்லையாம்.

இதை ஈடுகட்ட மதுரை மாநாட்டை யூஸ் பண்ணிக்கலாம் என்பது பிளானாம். இதற்காக சின்னமம்மி குரூப், தேனிக்காரரின் ஆதரவாளர்கள், குக்கர் பார்ட்டியில் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளுக்கு, இலையின் முக்கியஸ்தர்கள் வலை விரிக்கிறாங்க. தாமரை கட்சியிலும் சில முக்கிய நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடக்குதாம். தென்மாவட்ட தாமரை நிர்வாகி ஒருத்தரு, இலைகட்சி கூட்டணி தொடர்பாக சமீபத்தில் எழுதிய கடிதம் ஒண்ணு வைரல் ஆச்சு. மிரட்டும் தொனியில் அமைந்த இந்த கடிதத்துக்கு, மவுன்டன் தலைவரு, இதுவரை எந்த ரியாக்ஷனும் காட்டலையாம். இது சேலம்காரருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்காம். இதற்கு எதிர்வினையாற்றும் வகையில், தாமரையின் முக்கிய நிர்வாகிகள் சிலரை, இலைகட்சியில் இழுத்தே ஆகணும் என்று வலைவீசி இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ பார்லி எலக்‌ஷன் வர உள்ள நிலையில கோயம்பேடு கட்சியின் செயல்பாடு எப்டி இருக்கு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா ‘‘நடிகரின் கோயம்பேடு கட்சி, முன்னாடி ஏதோ பேர் சொல்ற அளவுக்கு இருந்துச்சு. ஆனா, இப்ப அந்த கட்சி, இருக்குற இடம் தெரியலையாம். அந்த கட்சியோட பொருளாளர் தான், கட்சியை கவனிக்கிறாங்க. அவங்களுக்கு சொந்த ஊரு வெயிலூர் மாவட்டத்துல இருக்குற குடியேற்றம் ஏரியா தான். கட்சி தொடங்குன வருஷத்துல, வெயிலூர் மாவட்டம் முழுசுமா அந்த கட்சிக்கு செல்வாக்கு ஓரளவுக்கு இருந்துச்சு. அந்த செல்வாக்க பயன்படுத்தி, அவரோட 3 எழுத்து ரத்த உறவுக்காரர், எம்எல்ஏ எலக்‌ஷன்ல 25 ஆயிரம் ஓட்டு வாங்கியது பழைய கதை. ஆனா.

இப்ப அந்த கட்சியில ஆளே இல்லையாம். குடியேற்றம் ஏரியாவுல, ‘ர’ என்ற எழுத்துல தொடங்குற பெயர் கொண்டவரும், பெயரின் முடிவுல குமாரை கொண்ட 2 பேரும் ஆளுக்கு கொஞ்சம் நிர்வாகிங்களை வெச்சிகிட்டு கட்சிய நடத்த போராடுறாங்க. இந்த நேரத்துல கட்சியை வளர்க்க சொல்லி, பொருளாளரும், அவரது 3 எழுத்து உறவுக்காரரும் நச்சரிக்கிறாங்களாம். இதனால கட்சி நிர்வாகிங்க என்ன செய்றதுன்னு தெரியாம, கட்சியில இருக்கலாமா… எஸ்கேப் ஆகலாமா என்று திட்டத்தில் இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ எந்த அதிகாரியின் வருமானத்தை பார்த்து யாருக்கு வயிற்றில் ‘ஆசிட்’ சுரக்கிறதாம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் 5 எழுத்து பெயர் கொண்ட வித்தியாசமான ஒரு இன்ஜினியரு இருக்காராம். இவர் யாரையும் தொந்தரவு பண்ணாம, தந்திரமாக கரன்சி குவிக்கிறாராம்.

அதாவது, வீடு மற்றும் அலுவலகம், வர்த்தக கட்டிடங்கள், வணிக வளாகம் உள்ளிட்ட கட்டிடங்களுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுப்பது, ஏற்கனவே கொடுத்த இணைப்பில் அடைப்பு இருந்தால் அதை சரிசெய்வது என எல்லாமே இவரது பணிதான். ஒரு வீட்டுக்கு புதிதாக பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க வேண்டுமென்றால் அந்த மெட்டீரியல் வாங்கணும். இந்த மெட்டீரியல் வாங்கணும்… என நீண்ட பட்டியல் போட்டு ரூ50 ஆயிரம் தரணும் வேண்டும் என கேட்கிறார். அய்யோ, இவ்வளவு முடியாதே… என வீட்டு உரிமையாளர்கள் கூறினால், சரி… சரி… 50% தள்ளுபடி… எனக்கூறி ரூ25 ஆயிரம் கறந்து விடுகிறார். இப்படி தினம் பல ரூ25 ஆயிரங்களை கறந்து விடுகிறார்.

இதைவிட பெரிய கூத்து என்னவென்றால், நல்லா இருக்கிற இணைப்புகளை வம்படியாக தோண்டி கரன்சியை கறக்கிறாராம். இப்படி அன்றாடம் கரன்சி மழையில் குளிக்கிறார். இவருக்கு, அதே ஐந்து எழுத்து பெயர் கொண்ட ஒரு அதிகாரியும் பக்கபலமாக இருக்கிறார். 2 ஐந்து எழுத்துக்களும் சேர்ந்து விஞ்ஞான முறையில் பல லட்சங்களை குவிப்பதை பார்த்து மற்ற அதிகாரிகள் வயிற்றில் ஆசிட் சுரக்கிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post இலை கட்சி மாநாட்டுக்காக ஒரு ஒன்றியத்துக்கு 5 லகரம் வழங்கும் சேலம்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Salemkar ,Lagaram ,Union for Leaf Party Conference ,Yananda ,leaf party ,Peter ,
× RELATED இலை கட்சியில் பிளவை தடுக்க அணிகளை...