×

இலை கட்சி ஆட்சியை தாக்கி பேசிய மாங்கனி கட்சி மக்கள் பிரதிநிதி மீது கடுப்பில் இருக்கும் சேலம்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘பிரின்டிங் செய்வதில் மாதம் பெரிய அளவில் நஷ்டம் யாருக்கு ஏற்படுகிறது…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாவட்ட ஆவின் நிர்வாகத்தில் பால் பாக்கெட் பிரிண்ட் செய்கிற ஒப்பந்த விவகாரம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளதாம். இப்பிரிவில், ஒப்பந்த ஊழியர்கள் 30 பேர்தான் இருக்கிறார்களாம். இவர்களுக்கான மாதம் சம்பளம் ஒன்றே முக்கால் லட்சம் வழங்கப்படுகிறது. ஆனால், ரூ.10 லட்சம் சம்பளம் வழங்குவதாக மாதந்தோறும் பில் பாஸ் ஆகிறதாம். ஒப்பந்த ஊழியர்கள் சம்பளம் போக, மீதி எட்டே கால் லட்சம் ரூபாய் எங்கே செல்கிறது என்பதுதான் விஸ்வரூபம் எடுத்து ஊழலாக இருக்குமோ என்று விவாதத்துக்கு வித்திட்டுள்ளதாம். இங்கு, பணிபுரிந்து வந்த முன்னாள் பொதுமேலாளர் ஒருவர் வடக்கு மண்டல மாவட்டத்துக்கு ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டார். அவர் வகுத்துக்கொடுத்த பாதையில் தற்போதைய அதிகாரியும் அப்படியே பயணிக்கிறாராம். ஆக மொத்தம், முன்னாள், இன்னாள் அதிகாரிகள் கூட்டு சேர்ந்து, மாதம்தோறும் பல லட்சங்களை சுருட்டுகிறார்களாம். வடக்கு மண்டல மாவட்டத்தில் பணிபுரியும் அந்த பொதுமேலாளர், நான் விரைவில் கோவைக்கு வந்துவிடுவேன் என சக அதிகாரிகளிடம் கூறி வருகிறாராம். கோவை மாவட்ட ஆவினில் நடக்கும் எல்லா விஷயங்களும் இந்த அதிகாரிக்கு உடனுக்குடன் அப்டேட் செய்யப்படுகிறதாம்… இவர்களை களையெடுத்து நிறுவனத்தின் நஷ்டத்தை தடுக்க வேண்டும் என்று அங்குள்ள ஊழியர்களே கோரிக்கை விடுத்து இருக்காங்க…’’ என்றார் விக்கியானந்தா.‘‘சேலம் விவிஐபியும், அவரது தொண்டர்களும் கொந்தளிப்பில் இருக்கிறார்களாமே, ஏனாம்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ மாங்கனி மாவட்டத்தில் இலைகட்சிக்கும், மாம்பழ கட்சிக்கும் இடையில் உள்ள புகைச்சல் நாளுக்கு நாள் அதிகமாகி கிட்டே போகுதாம். இந்தவகையில் சமீபத்தில் மாம்பழ கட்சி மக்கள் பிரதிநிதி ஒருவர், அதிகாரிகள் மத்தியில் பேசியது மேலும் கடுப்பை கிளப்பி இருக்காம். சமீபத்தில் கலெக்டர் அலுவலகத்தில், பல்வேறு துறை அதிகாரிகளுக்கான ஆய்வு கூட்டம் நடந்ததாம். இதில் டேம் தொகுதி எம்எல்ஏ பேசும் போது, ‘போன ஆட்சியில கட்டின கட்டிடம் எல்லாம் காத்துக்கும், மழைக்கும் சாஞ்சு விழும்போல இருக்கு. அவங்க இப்படி கட்டிடங்கள் கட்டினதுக்கு கட்டாமலேயே இருந்திருக்கலாம். இதில் நிறைய ஊழலும் நடந்திருக்கு. அது போன்ற தவறுகளை இந்த ஆட்சியில செய்யக்கூடாது. அதிகாரிகள் தரமான கட்டிடங்களை கட்டுவாங்கன்னு நம்பிக்கை இருக்கு..’ என்றாராம். இது எப்படியே சேலம்காரரின் காதில் விழுந்ததும் டென்ஷனாகிவிட்டாராம். அதேபோல அவரை ஜெயிக்க வைத்த இலை கட்சி தொண்டர்கள், நம்மலா ஜெயித்தவரு… சுகமாக உட்கார்ந்து கொண்டு சும்மா இருக்கும் நம்மளை சீண்டுவதா என்று விவிஐபியை உசுப்பேற்றி இருக்கிறார்களாம். அவரும், எனக்கு தெரியும்.. அதை நான் பார்த்து கொள்கிறேன்.. உள்ளாட்சி தேர்தல் வருதில்ல, அப்போது நாம அவங்களை ஒரு கை பார்த்துடலாம்னு உருமினாதாக பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.‘‘கரன்சிக்காக யாராவது கால்வாயை அடைப்பார்களா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வடமாநில நதி பெயரில் முடியும் மாவட்ட நகரத்திற்குள் சட்டமன்ற தேர்தலுக்கும் முன்னதாக ரூ.3 கோடி செலவில் பல்வேறு இடங்களிலும் புதிய சாலைகள் போட்டாங்க. இதற்காக ஊர் முழுக்க உள்ள பாதாளச்சாக்கடையில் இருந்த அடைப்பு ஏற்பட்டதாம். அதை தோண்டி வேலை பார்க்க வேண்டுமாம். ஆனால், அதை செய்யவில்லையாம். அப்போது, இலைக்கட்சி அமைச்சரானவரும், அவரது ஆதரவாளர்களும் இதுகுறித்து கொஞ்சமும் கவலைப்படவில்லை. சாலைகள் போட்டால், தேவைக்குரிய கமிஷன் வந்து சேரும் என்பதால், பாதாளச்சாக்கடை சீரமைப்பைப் பற்றியே யோசிக்காமல், வருவாயை மட்டுமே குறியாக வைத்து சாலைகளை போட்டு முடித்து விட்டனர். இப்போது நகருக்குள் பாதாளச்சாக்கடை அடைப்பு விஸ்வரூபமெடுத்து, எங்கும் சாக்கடைக்கழிவுகள் பீறிட்டுக் கிளம்பி அத்தனை சாலைகளையும் சேதப்படுத்தி உள்ளது. இதனால் சுகாதாரச் சீர்கேட்டில் மக்கள் தவிக்கின்றனர். சாலை அமைக்கும் முன்பு பாதாள சாக்கடையை சீராக்கி இருக்க வேண்டும். கரன்சிக்காக கால்வாயை அடைத்துவிட்டார்கள் என்று பொதுமக்கள் செம கடுப்பில் இருக்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘ஒரே போஸ்டிங்… எத்தனை டிரான்ஸ்பர் என்று மண்டை காயும் மருத்துவமனை ஊழியர்கள் பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘நாகர்கோவில் இஎஸ்ஐ மருந்தகத்தில் யார் பொறுப்பு மருத்துவ அலுவலர் என்று இருந்த விவகாரம் தற்போது அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. இதில் முடிவு எடுக்க வேண்டிய மதுரை மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் நாகர்கோவில் இஎஸ்ஐ மருந்தகத்தில் பணியில் இளையவரிடம் இருந்து பொறுப்பை எடுத்துவிட்டு பணியில் மூத்தவரிடம் வழங்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளார். அதன்படி அக்டோபர் 29ம் தேதி தக்கலையில் உள்ள இஎஸ்ஐ மருந்தகத்தில் முதுநிலை உதவி மருத்துவரை நாகர்கோவிலுக்கு பொறுப்பு மருத்துவ அலுவலராக நியமித்து ஆணை பிறப்பித்தார். ஆனால், அவர் தனக்கு இந்த பணியிடம் வேண்டாம் என்று அடம்பிடிக்க 2 நாட்கள் கழித்து நவம்பர் 1ம் தேதி காலையில் நாகர்கோவில் மருந்தகத்தில் பணியாற்றும் உதவி மருத்துவர் ஒருவரை நியமித்து மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர் ஆணையிட்டார். நாகர்கோவிலில் அவரை விட சீனியர் இருக்கும்போது எப்படி உதவி மருத்துவருக்கு இன்சார்ஜ் கொடுக்கலாம் என்ற கேள்வி எழுந்தது. உடனே அன்று மாலையே மீண்டும் தக்கலையில் உள்ள இஎஸ்ஐ மருந்தக அதே முதுநிலை உதவி மருத்துவரை பொறுப்பு அலுவலராக நியமித்து மாலையிலேயே மற்றொரு ஆணையையும் பிறப்பித்துள்ளார்கள். தகவல் அறிந்து தக்கலை மருத்துவ அதிகாரி 20 நாள் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து நவம்பர் 2ம் தேதி மாலையில் மணவாளக்குறிச்சி முதுநிலை உதவி மருத்துவரை கூடுதல் பொறுப்பாக நியமித்து மற்றொரு ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்படி 29ம் தேதி ஒரு ஆர்டர், 1ம் தேதி காலையில் ஒன்று, மாலையில் ஒன்று, 2ம் தேதி மற்றொறு ஆர்டர் என்று இஎஸ்ஐயில் டாக்டர் ஒருவரை பொறுப்பு அலுவலராக நியமிக்க ஆர்டர் மேல் ஆர்டர் போட்டு இத்தனை களபேரமா என்று சொல்லி சிரிக்கின்றனர் அந்த மருத்துவமனை ஊழியர்கள்…’’ என்றார் விக்கியானந்தா. …

The post இலை கட்சி ஆட்சியை தாக்கி பேசிய மாங்கனி கட்சி மக்கள் பிரதிநிதி மீது கடுப்பில் இருக்கும் சேலம்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Mangani ,Leaf Party government ,Salemkar ,People's Representative ,Yananda ,Uncle ,Peter ,Coimbatore Aavin ,wiki ,
× RELATED மாங்கனிக்கு பெயர் போன சேலம் மக்களவை தொகுதியை வசியப்படுத்தப்போவது யார்