×

3-2 என தொடரை வென்றது வெஸ்ட்இண்டீஸ் சில சமயம் தோல்வி நல்லது நிறைய கற்றுக்கொள்ளலாம்: கேப்டன் ஹர்திக் பாண்டியா சொல்கிறார்

லாடர்ஹில்: இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் இடையே 5வது மற்றும் கடைசி டி.20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நேற்றிரவு நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன் எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் 61 (45 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), திலக்வர்மா 27 ரன் (18பந்து) எடுத்தனர். வெஸ்ட்இண்டீஸ் பவுலிங்கில் ரொமாரியோ ஷெப்பர்ட் 4, அகீல் ஹூசைன், ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணியில் கைல் மேயர்ஸ் 10 ரன்னில் வெளியேற பிராண்டன்கிங், நிக்கோலஸ்பூரன் அதிரடியாக 2வது விக்கெட்டிற்கு 107 ரன் குவித்தனர். 35 பந்தில் ஒரு பவுண்டரி, 4 சிக்சருடன் 47 ரன் எடுத்து பூரன் அவுட் ஆனார். 18 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 171 ரன் எடுத்து வெஸ்ட்இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிராண்டன் கிங் 85 (55 பந்து, 5 பவுண்டரி, 6 சிக்சர்), ஷாய் ஹோப் 22 ரன்னில் (13பந்து) நாட்அவுட்டாக இருந்தனர். இந்த வெற்றி மூலம் 3-2 என வெஸ்ட்இண்டீஸ் தொடரை கைப்பற்றியது. ஷெப்பர்ட் ஆட்டநாயகன் விருதும், 5 போட்டியில் 175 ரன் எடுத்த பூரன் தொடர்நாயகன் விருதும் பெற்றனர்.

தோல்விக்கு பின் இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியதாவது: 10 ஓவருக்கு பின் நாங்கள் ரன் ரேட்டை உயர்த்தமுடியவில்லை. நான் உள்ளே வந்தபோது ரன்ரேட் வேகத்தை இழந்தோம். நான் பேட்டிங்கில் நேரம் எடுத்துக்கொண்டேன். நான் விரும்பியபடி சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை, அந்த கட்டம் முக்கியமானது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்வதற்கு நமக்கு நாமே சவாலாக இருக்கவேண்டும் என்பதற்காக தான். இளம் வீரர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். டி.20 உலக கோப்பைக்கு முன் சிறந்த வீரர்களை கண்டுபிடிக்க எங்களுக்கு போதுமான நேரம் உள்ளது. அதற்கு முன் ஒருநாள் போட்டி உலக கோப்பை வரவுள்ளது. சில சமயங்களில் தோல்வியடைவது நல்லது. நீங்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம். அனைவருக்கும் ஒரு பெரிய நன்றி. டி20 உலகக் கோப்பை இங்கேதான் நடக்க உள்ளது. அப்போது பெரிய இலக்குடன் வருவோம்’’ என்றார்.

இந்தியாவை தோற்கடித்தது மிகப்பெரிய வெற்றி வெஸ்ட்இண்டீஸ்கேப்டன் ரோவ்மேன் பாவல் கூறியதாவது: வெற்றியை வார்த்தைகளால் விவரிப்பது கடினம். இந்தியாவை தோற்கடிப்பது எங்களுக்கு மிகப் பெரிய தொடர். 4வது போட்டியில் தோல்விக்கு பின் நாங்கள் உட்கார்ந்து பேசினோம். நாங்கள் எங்கள் முகத்தில் புன்னகையை மட்டுமல்ல, ரசிகர்களுக்காகவும் விளையாடுகிறோம். பூரன் எங்களுக்கு ஒரு பெரிய வீரர். 5 போட்டியில் 3ல் வெற்றிக்கு உதவினார். இந்தியாவின் சக்திவாய்ந்த பேட்டிங் வரிசையை பவுலர்கள் கட்டுப்படுத்தியது பெருமையளிக்கிறது. ரசிகர்கள் எப்போதும் எங்களுக்கு ஆதரவளித்தனர். அது எங்களுக்கு உந்துதலாக வைத்திருக்கிறது, எங்களை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. என்றார்.

The post 3-2 என தொடரை வென்றது வெஸ்ட்இண்டீஸ் சில சமயம் தோல்வி நல்லது நிறைய கற்றுக்கொள்ளலாம்: கேப்டன் ஹர்திக் பாண்டியா சொல்கிறார் appeared first on Dinakaran.

Tags : West Indies ,Hardik Pandya ,Lauderhill ,T20 ,India ,Lauderhill Stadium ,Florida, USA ,Dinakaran ,
× RELATED பிளே ஆப் வாய்பை தக்க வைக்க கொல்கத்தாவை வெல்லுமா மும்பை