×

கத்தார் நாட்டிலிருந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னை வந்தவர் கைது

மீனம்பாக்கம்: கத்தார் நாட்டிலிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் சென்னை விமானநிலையத்தில் வந்திறங்கிய தஞ்சாவூரை சேர்ந்த பயணியை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவரை மேல்நடவடிக்கைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் இருந்து நேற்றிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளுடன் வந்திறங்கியது. அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பினர். அதில் ஒரு பயணியாக வந்த ஜோசப் என்பவரின் பாஸ்போர்ட்மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதைத் தொடர்ந்து அவரை வெளியே விடாமல் நிறுத்தி வைத்து, அவரது பாஸ்போர்ட்டை தீவிரமாக ஆய்வு செய்தனர். இதில், தஞ்சாவூரை சேர்ந்த கருப்பையா என்பவர், ஜோசப் என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் மூலம் சென்னை வந்திருப்பது தெரியவந்தது.

பின்னர் பிடிபட்ட ஜோசப் என்பவரை குடியுரிமை அதிகாரிகள் தனியறையில் வைத்து தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில், அவர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (41). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுற்றுலாப் பயணிகள் விசாவில் கத்தார் நாட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பாமல், கத்தார் நாட்டிலேயே சட்டவிரோதமாக தங்கி, கூலிவேலை பார்த்துள்ளார். தற்போது, சொந்த ஊரான இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும் என கருப்பையாவுக்கு ஆசை ஏற்பட்டது. கத்தார் நாட்டுக்கு சுற்றுலா விசாவில் சென்று, அங்கு சட்டவிரோதமாக தங்கியதால், அவரது பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டது. எனவே, அதே பாஸ்போர்ட்டில் இந்தியாவுக்குத் திரும்பி வரமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் போலி பாஸ்போர்ட் தயாரித்து வழங்கும் ஏஜெண்டுகளை கருப்பையா அணுகி, அவர்களிடம் பணம் கொடுத்து, ஜோசப் என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் வாங்கியுள்ளார்.

பின்னர் ஜோசப் என்ற பெயரில் போலி அடையாள அட்டைகளுடன் கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் இருந்து நேற்றிரவு இன்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலமாக நேற்றிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஜோசப் (எ) கருப்பையா போலி பாஸ்போர்ட்டில் வந்திறங்கியதாகத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தஞ்சாவூரை சேர்ந்த கருப்பையாவை கைது செய்தனர். இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, சென்னை விமானநிலையத்தில் பிடித்து வைத்திருந்த கருப்பையாவை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அழைத்து சென்று, காவல் நிலையத்தில் வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவருக்கு போலி பாஸ்போர்ட் எடுத்துக் கொடுத்த ஏஜென்ட்கள் யார், இதற்காக அவர்கள் எவ்வளவு பணம் பெற்றனர் என்பது உள்பட பல்வேற கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post கத்தார் நாட்டிலிருந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னை வந்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Qatar ,Meenambakkam ,Thanjavur ,Chennai airport ,
× RELATED கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்...