×

அன்று – பாறைகள் நிரம்பிய பூமி.. இன்று – பூத்துக்குலுங்கும் சோலை

விவசாயத்தில் நிச்சயம் சாதிக்கலாம் என பலர் நிரூபித்துவிட்டார்கள். அந்த வரிசையில் ஒருவராக இருக்கிறார் திருச்சி லால்குடி அருகேயுள்ள புரத்தாக்குடியை சேர்ந்த கிங்ஸ்லி ரூபன். இவர், பாறைகள் நிரம்பி கரடுமுரடாக கிடந்த நிலத்தை வாங்கி, திருத்தி பல பயிர்களைப் பயிரிட்டு இன்று பசுஞ்சோலை ஆக்கியிருக்கிறார். செம்மரம் உள்ளிட்ட மரப்பயிர்களை சாகுபடி செய்து வருவாய் ஈட்ட வழிசெய்திருக்கிறார். இன்னும் பல திட்டங்களோடு இருக்கும் கிங்ஸ்லி ரூபனை சந்திக்க ஒரு மாலைப்பொழுதில் சென்றிருந்தோம். அவர் அப்போது வெளிநாடு சென்றிருந்ததால், இந்தப் பண்ணையை நிர்வகித்து வரும் அவரது சகோதரி மகன் பிரபு ரூபனைச் சந்தித்தோம்…

‘‘எங்களது பண்ணையில் வெறும் செம்மரங்கள் மட்டுமல்லாமல், மர வேலைகளுக்கு பயன்படும் பல்வேறு விலை உயர்ந்த மரங்கள், காய்கறி பயிர்கள், கொடி வகை காய்கள் மற்றும் பழங்கள், கடலை, எள், உளுந்து உள்ளிட்டவற்றை பயிர் செய்கிறோம். இங்கு இல்லாத தாவரங்களே இல்லை எனும் அளவுக்கு பல தாவரங்களை வளர்த்து வருகிறோம். இந்த தோட்டம் எங்களது மாமா கிங்ஸ்லி ரூபனின் கனவு. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பிருந்து பாறைகள் நிரம்பிய எதற்கும் உதவாத இந்த பகுதி நிலங்களை என் மாமா சிறுக சிறுக வாங்கினார். சில இடங்களில் பாறைகளை வெடி வைத்து உடைத்து எடுத்தார். வெளியில் இருந்து மண் வாங்கி வந்து நிலத்தை தயார் செய்தார். காவிரி ஆறு ஒடும் பகுதி என்றாலும் இங்கு கரடுமுரடான பாறைகள் இருப்பதால் தண்ணீர் வசதி அவ்வளவாக இருக்காது. அதனால் இப்பகுதியில் இருந்த பாறைகளை உடைத்து 100 அடி ஆழத்தில் பெரிய கிணறு வெட்டினார். அதில் இருந்து கிடைக்கும் தண்ணீரை சிக்கனமாக சொட்டுநீர் பாசன முறையில் பயன்படுத்தி இந்த பண்ணையை உருவாக்கினார்.

இங்கு 2 ஏக்கரில் செம்மரம் சாகுபடி செய்துள்ளோம். தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் இருந்து செம்மரக் கன்றுகளை வாங்கி நடவு செய்தோம். ஒரு மரக்கன்றின் விலை ரூ. 5 ஆயிரம் என வாங்கி வந்தோம். மொத்தம் 520 கன்றுகள் வாங்கினோம். வாங்கும்போது விரல் மொத்தத்தில் 9 முதல் 10 அடி உயரத்தில் 3 ஆண்டு வயதுடைய மரங்களாக இருந்தன. அவற்றை நடவு செய்து 3 ஆண்டுகள் ஆகிறது. இப்போது ஒரு அடி குறுக்களவுடன் 25 அடிக்கு மேல் வளர்ந்துவிட்டது. 520 கன்றுகளில் ஒரே ஒரு கன்று மட்டும் நடும்போதே உடைந்து விட்டது. மற்றபடி நட்ட அனைத்து கன்றுகளும் வளர்ந்திருக்கின்றன. இந்த கன்றுகள் வாங்க செய்த செலவு மட்டும்தான் அதிகம். பராமரிப்பு செலவு என்பது மிகக்குறைவு. ஒரு முறை உழவு செய்த பின்னர். 8 அடிக்கு 8 இடைவெளியில் 2 அடி ஆழ குழிகள் எடுத்து கன்றுகளை நடவு செய்தோம். ஒரு ஆண்டு வரை சொட்டுநீர் பாசன முறையில் தேவைக்கு ஏற்ப பாசனம் கொடுத்தோம். தற்போது மிக வறட்சியாக இருக்கும் காலத்தில் மட்டும் தண்ணீர் பாய்ச்சுகிறோம்.

செம்மரங்கள் மற்ற காலங்களைவிட கோடை காலத்தில் பச்சை பசேல் என செழிப்பாக காட்சியளிக்கும். இதன் வயது 20 ஆண்டுகள். அடுத்த 14 ஆண்டுகளில் இந்த மரங்கள் நன்கு வைரம் பாய்ந்து அறுவடைக்கு தயாராகிவிடும். இந்த பகுதியில் நிலவும் வறட்சி, மண் வாகு மற்றும் வடிகால் வசதி மரங்கள் செழிப்பாக வளர்ந்ததற்கு மற்றொரு காரணம். இந்த மரங்கள் அடுத்த 14 ஆண்டுகளில் பல கோடிக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம். ஒரு மரம் குறைந்த பட்சமாக மரத்தின் எடையை பொருத்து ரூ.10 லட்சத்துக்கு விற்கும் என்று எதிர்பார்க்கிறோம். இங்கு செம்மரம் தவிர 100 சந்தன மரங்கள் 2 ஏக்கரிலும், டிம்பர் பணிகளில் பெரிதும் பயன்படுத்தப்படும் ஆப்ரிக்கன் மகோகனியில் 300 மரங்கள் 1.5 ஏக்கரில் சாகுபடி செய்திருக்கிறோம்.

திருச்சி மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்களின் வழிகாட்டுதலின்படி திராட்சை 45 சென்டில் விவசாயம் செய்து கடந்த ஆண்டுக்கான சிறந்த திராட்சை விவசாயி என்ற விருதை பெற்றோம். அந்த திராட்சை கொடிகளில் இருந்தே மேலும் ஒரு ஏக்கரில் திராட்சை சாகுபடி செய்வதற்காக கன்றுகள் உற்பத்தி செய்துள்ளோம். திராட்சை சாகுபடியில் பதியத்திற்கு எடுத்து வைத்துள்ள நாற்றுகள் போக ரூ.1 லட்சம் லாபம் கிடைத்தது. சுழற்சி முறையில் பாகல், பீர்க்கு போன்ற கொடி வகை காய்கறிகளையும் பயிரிட்டுள்ளோம். எங்களது தோட்டத்தில் விளையும் காய்கறிகள், பழங்கள் தரமாக இருப்பதால் வியாபாரிகள் நேரடியாக பண்ணைக்கு வந்து கொள்முதல் செய்து கொள்வார்கள். இதனால் எங்களுக்கு சந்தைபடுத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை. காய்கறிகள் விற்பனை செய்ததில் மட்டும் ரூ.4 லட்சம் வரை லாபம் கிடைக்கிறது. பண்ணையில் 4 கறவை பசுக்கள் உள்ளன. அவற்றில் இருந்து கிடைக்கும் உரத்தை விவசாயத்துக்கு பயன்படுத்திக் கொள்கிறோம். இது ஆர்கானிக் சான்று பெற்ற பண்ணை என்பதால் செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகளை பண்ணைக்குள் எந்த ரூபத்திலும் அனுமதிப்பதில்லை. அதேபோல பண்ணையில் அமைக்கப்பட்டிருக்கும் 2 ஏக்கர் குளத்தில் மீன் வளர்க்கப்படுகிறது.

கிணற்றிலிருந்து இரவு, பகல் என தண்ணீர் இறைத்து குளத்தில் சேமித்து, தண்ணீரை மீண்டும் சொட்டுநீர் பாசன அமைப்புகள் மூலம் பயன்படுத்துவதால் எங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருப்பது இல்லை. அதேபோல் சீசனுக்கு ஏற்ப உளுந்து, பயறு, கடலை, எள் போன்ற தானியங்களும் அந்தந்த பருவத்துக்கு ஏற்ப பயிர் செய்து வருகிறோம். பண்ணையில் பல்வேறு புதிய மரங்கள், பயிர்கள் என தொடர்ந்து சாகுபடி செய்யும் பணிகள் நடந்துகொண்டே வருகிறது. ஓரிரு ஆண்டுகளுக்கு பின்னர் நீங்கள் வந்து பார்க்கும் போது இங்கு கிடைக்காதது எதும் இல்லை என்ற வகையிலான ஒரு அழகிய சோலை வனத்தைப் பார்க்கலாம்’’ என நம்பிக்கையுடன் பேசுகிறார் பிரபு ரூபன்.
தொடர்புக்கு
பிரபு ரூபன்: 96986 36388

ஏற்றுமதிக்கு தடையில்லை

செம்மரத்தை ஏ, பி, சி, டி என தரம் பிரிக்கின்றனர். இதில் சி பிரிவு செம்மரமே ஒரு டன் 25 லட்சத்துக்கு மேல் விலை போவதாக கூறுகின்றனர். செம்மரம் மருத்துவ பயன்பாடுகளுக்கும், இசைக்கருவிகள், சிற்பங்கள் தயாரிக்கவும் அதிகளவில் பயன்படுகின்றன. செம்மரத்துக்கு அணுக்கதிர் வீச்சில் இருந்து பாதுகாக்கும் தன்மை இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக ஜப்பானியர்கள் செம்மரத்தை இழைத்து வீடுகளின் சுவர்களில் பதித்து அணுக்கதிர் வீச்சில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்கிறார்களாம். எந்த ஒரு உயிரினமாக இருந்தாலும் அதன் எண்ணிக்கை 2 ஆயிரத்து 500க்கும் கீழ் குறையும்போது அது அரியவகை உயிரினம் என்ற பட்டியலில் சேர்க்கப்படும். இந்நிலையில் இந்தியாவில் அரிய வகை மரமாக செம்மரம் கருதப்பட்டது. இதன்பின் ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் 2 கோடிக்கும் மேலான செம்மரங்கள் உள்ளதை ஆதாரத்துடன் தெரிவித்த பின்னர் செம்மரம் அரியவகை மரங்கள் பட்டியலில் இருந்து கடந்த 2018ம் ஆண்டு நீக்கப்பட்டது. எனினும் காடுகளில் உள்ள செம்மரங்களை வெட்டுவதற்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வளர்க்கும் மரங்களை வெட்டுவதற்கும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் எந்த தடையும் இல்லை என ஒன்றிய அரசின் பன்னாட்டு வர்த்தக பொது இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

The post அன்று – பாறைகள் நிரம்பிய பூமி.. இன்று – பூத்துக்குலுங்கும் சோலை appeared first on Dinakaran.

Tags : Purathakudy ,Lalkudi, Trichy ,Earth ,
× RELATED மிகப் பெரிய காரியங்களுக்கு மிகச் சிறிய காரணங்கள் போதும்!