×

சூரியகுமார் அதிரடி அரைசதம் இந்தியா ரன் குவிப்பு

லாடர்ஹில்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில், இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன் குவித்தது. ரீஜினல் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒபெத் மெக்காய், ஓடியன் ஸ்மித் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக அல்ஜாரி ஜோசப், ரோஸ்டன் சேஸ் இடம் பெற்றனர். ஜெய்ஸ்வால், கில் இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர். ஜெய்ஸ்வால் 5 ரன், கில் 9 ரன் எடுத்து அகீல் உசேன் சுழலில் விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியா 2.5 ஓவரில் 17 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், சூரியகுமார் – திலக் வர்மா ஜோடி 3வது விக்கெட்டுக்கு 49 ரன் சேர்த்தது. திலக் வர்மா 27 ரன் (18 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி சேஸ் பந்துவீச்சில் அவரிடமே பிடிபட்டார். அடுத்து வந்த சாம்சன் 13 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தார்.

ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், அதிரடியாக விளையாடிய சூரியகுமார் 38 பந்தில் அரை சதம் அடித்தார். இந்தியா 15.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 121 ரன் எடுத்திருந்த நிலையில், மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் கேப்டன் ஹர்திக் 14 ரன், சூரியகுமார் 61 ரன் (45 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த அர்ஷ்தீப் (8), குல்தீப் (0), அக்சர் 13 ரன் எடுத்து வெளியேறினர். இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன் குவித்து. சாஹல் (0), முகேஷ் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ரொமாரியோ ஷெப்பர்ட் 4, அகீல் உசேன் 2, ஹோல்டர் 2, சேஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

The post சூரியகுமார் அதிரடி அரைசதம் இந்தியா ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Suryakumar ,India ,Lauderhill ,T20 ,West Indies ,
× RELATED 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை...