×

மேகதாது அணை விவகாரம் முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்: தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்ட வேண்டும் என்று அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் நேற்று பாமக இளைஞர், மாணவர் சங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி பங்கேற்று பேசியதாவது: கர்நாடக அரசு புதிதாக மேகதாது அணையை கட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேகதாது அணை கட்டினால் காவிரி டெல்டா பகுதியில் விவசாயத்துக்கு மட்டுமல்ல, குடிப்பதற்கு கூட ஒரு சொட்டு தண்ணீர் இருக்காது. இதனால் உடனடியாக தமிழக முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, நாம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர வேண்டும் என்று டெல்லி வரை சென்று ஒன்றிய அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட வேண்டும். நான்குநேரி பள்ளி மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் சட்டத்தின் முன் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இது போன்ற சம்பவங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரி வாசல்களில் விற்கப்படும் கஞ்சா, மது, அபின், கோகைன் போன்ற போதைப் பொருட்களே காரணமாக உள்ளது. தமிழக அரசு ஆபரேஷன் கஞ்சா 2.0 மற்றும் 2.1 நடத்தி வருடந்தோறும் 2000 குற்றவாளிகளை கைது செய்தாலும் கூட, அதை ஒழிக்க முடியவில்லை. நெய்வேலி அனல்மின் நிலைய நிர்வாகம் மூன்றாவது சுரங்கம் அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். காரணம், இதனால் 12,500 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. எனவே நெய்வேலி நிர்வாகம் புதிதாக மூன்றாவது சுரங்கம் தோண்டும் பணிகளை உடனடியாக கைவிட வேண்டும் என்றார்.

The post மேகதாது அணை விவகாரம் முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்: தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : CM ,Meghadatu dam ,Anbumani ,Tamil Nadu government ,CHENNAI ,Chief Minister ,M.K.Stalin ,PM ,
× RELATED மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முடிவெடுப்பது சட்டவிரோதம்: கி.வீரமணி